இப்போதெல்லாம் கட்சியை யார் நடத்துறாங்க, யார் தலைவர்னே தெரியலை, அதெல்லாம் அரசியல் விவகாரம், நமக்கு எதுக்கு, நான் சினிமாக்காரன் என அதிமுகவை மறைமுகமாக நடிகர் ராதாரவி விமர்சித்து பேசினார்.
2019 ஆண்டு பாஜக செயல் தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் ராதாரவி பாஜகவில் இணைந்தார். தற்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். ராதாரவி எந்த கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சிப்பார்.
இதனால் இவர் திமுக, அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். இந்த நிலையில் ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராதாரவி பேசுகையில், பட விழாவுக்காக அடிக்கடி வெளியூருக்கு போவோம். அப்போது நடிகர் மயில்சாமிதான் பெரிய ரவுடி மாதிரி நடந்து கொள்வார். போகிற இடத்தில் எல்லாம் எல்லாரையும் அடித்து விடுவார். இப்படி ஒரு ஹோட்டல்ல வேலை செய்யும் ஆளை அடித்துவிட்டார்.
இதனால் அந்த ஹோட்டல் ஓனர் எங்க மேல கோபப்பட்டு எங்களை பிடிக்கிறதுக்கு ஆள்களை அனுப்பிவிட்டார். எப்படியும் நாங்கள் சென்னை திரும்ப ரயில்நிலையத்திற்கு வந்துதான் ஆக வேண்டும் என்பதை அறிந்த அந்த ஓனர், மயில்சாமியின் அங்க அடையாளங்களை வைத்து தேடுகிறார்கள். ஆனால் அவரோ பிளாட்பார்மில் படுத்திருந்த ஆட்களுடன் போய் படுத்துகிட்டாரு என நகைச்சுவை கலந்து ராதாரவி கூறினார்.
அவர் மேலும் பேசுகையில் நல்ல வேளை அரசியல் தலைவர்கள் எல்லாம் நல்ல காலத்துலேயே போய் சேர்ந்துட்டாங்க. இப்போ காலம் சரியே இல்லை. இப்போ யார் தலைவர் ஆகுறாங்க, யார் கட்சியை நடத்துறாங்கன்னே தெரியவில்லை. இதெல்லாம் அரசியல் விவகாரம். நமக்கு எதுக்கு, நான் சினிமாக்காரன், எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை என்றார்.