திருச்சி, மார்ச் 15: திருச்சி பாலக்கரை ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது தவார் அலி (37) என்பவர், திருச்சி நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று இரவு, அலுவலக பணிகள் முடிந்து, தனது குமாஸ்தாவுடன் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கீழப்புதூர் பகுதியில், மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, அரிவாளால் வெட்டினர். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட தவார் அலி மயங்கி விழுந்தார்.
சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.