விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை காணாமல்போனது குறித்த வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள புன்னைவனநாதர் சன்னதியில் உள்ள லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்ததாகவும், 2004ஆம் ஆண்டு குடமுழுக்கு விழாவிற்குப் பிறகு அந்தச் சிலை காணாமல்போனதாகவும்,
அதற்குப் பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டுள்ளது ஆகம விதிகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
புதிய சிலையை அகற்றிவிட்டு, ஏற்கனவே உள்ள சிலையை வைத்து குடமுழுக்கு நடத்தவும், கோயில் முறையாக நிர்வகிப்பதை உறுதிசெய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆகம வல்லுநர்கள், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கைவைத்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மயில் சிலை காணாமல்போனதாகக் கூறப்படும் 2004ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடமுழுக்கு தொடர்பான 2100 ஆவணங்கள், 2009, 2013ஆம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டதாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிலை காணாமல்போனது தொடர்பாக அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் ரங்கராஜன் தெரிவித்தார்.
காணாமல்போன சிலை இன்னும் மீட்கப்படவில்லை என்றும், இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிலை காணாமல்போன விவகாரத்தில் உண்மை கண்டறியும் விசாரணை நடைபெற்றுவருவதாக இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், அசல் மயில் சிலை காணாமல்போனது குறித்த விசாரணையில் ஏற்படும் காலதாமதத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்ததுடன், வாயில் மலரைக் கொண்டு அர்ச்சிக்கும் மயில் சிலையைப் புதிதாக வைக்க வேண்டுமென அரசுக்கு அறிவுறுத்தினர்.
மேலும், பழைய சிலை காணாமல்போனது குறித்த புலன் விசாரணை, உண்மை கண்டறியும் விசாரணை ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை அரசும், அறநிலையத் துறையும் தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்