திருச்சி மேயர் வேட்பாளராக தனது மகனை அறிவிக்க கே.என்.நேரு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் பிறந்தாளை திருச்சியில் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர் திமுகவினர்.கால் நூற்றாண்டு காலமாக திருச்சி திமுகவின் முகமாக இருப்பவர் கே.என்.நேரு. கலைஞர், மு.க.ஸ்டாலின் இருவருக்கும் நெருக்கமானவர். திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், திமுகவினரைப் பொறுத்தவரை நேரு தான் எப்போதும் மினிஸ்டர். அவரை அழைப்பது என்றால் முன்னொட்டாக மினிஸ்டர் என்ற வார்த்தை எப்போதும் சேர்ந்து கொள்ளும்.
அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் திருச்சி மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்று சென்றவர். இருவரும் ஒன்றாக இணைந்து பல மேடைகளை அலங்கரித்தாலும் இரு தரப்புக்குமிடையே லேசான பனிப்போர் நிலவுவதாக சொல்கிறார்கள். வழக்கமான சீனியர், ஜூனியர் பிரச்சினைதான் இது. இருப்பினும் நேரு இது குறித்து தீவிரமாக ஆலோசித்துள்ளார். தனக்குப் பின்னர் திருச்சியின் முகமாக அன்பில் மகேஸ் இருப்பார் என்று கூறப்படுவது அவரை யோசிக்கச் செய்துள்ளது.
இந்த சூழலில் தான் தனது மகன் அருண் நேருவை தீவிர அரசியலில் களமிறக்கியுள்ளார். நேற்று அருண் நேருவின் பிறந்த நாள் விழா திருச்சியே அல்லோகலப்படும் அளவுக்கு கொண்டாடப்பட்டுள்ளது. பிறந்தநாளுக்கு முந்தைய தினமே கட்சிக்காரர்கள் 5000 பேரை அழைத்து மட்டன் பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளனர். நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் பேனர்கள் அணி வகுத்துள்ளன.பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வாழ்த்தும் பெற்றுள்ளார் அருண் நேரு. இனியும் தாமதிக்காமல் தனது மகனை அரசியலுக்குள் கொண்டுவந்தால் மட்டுமே திருச்சியில் தனது பிடி நழுவாது. இல்லையேல் உதயநிதிக்கு மிக நெருக்கமாக இருக்கும் அன்பில் மகேஸ் அந்த இடத்தை பிடிக்கக்கூடும் என நினைக்கிறாராம் கே.என்.நேரு.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சியின் மேயர் வேட்பாளராக அருண் நேருவை அறிவிக்க வலியுறுத்தி ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்க உள்ளாராம். ஸ்டாலினும் இதை தட்டிக் கழிக்கமாட்டார் என்கிறார்கள் நேருவின் ஆதரவாளர்கள். “தலைமைக் கழகத்தில் முதல்வர் ஸ்டாலினோடு வலம் வரும் துரைமுருகன் தனது மகனை எம்.பியாக்கிவிட்டார். டி.ஆர்.பாலு தனது மகனை எம்.எல்.ஏ ஆக்கிவிட்டார். முதல்வர் எங்கள் மினிஸ்டரின் மகனுக்கு மேயர் சீட் தரமாட்டாரா என்ன!” என்று நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக நேரு இருப்பதால், அருண் நேரு மேயராக வந்தால் பல விஷயங்களுக்கு எளிதாக இருக்கும், திருச்சியை எப்போதும் நம் கண்ட்ரோலில் வைத்திருக்க முடியும் என்ற கணக்கும் இருக்கிறதாம்.