திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் மர்ம பார்சலை இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கச்சொல்லி கொடுத்து விட்டுச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. டிச.6 என்பதால் வெடிகுண்டு ஏதும் இருக்கப்போகிறது என்கிற பரபரப்பில் சந்தேகமடைந்து பாம் ஸ்குவாட் போலீஸார் வந்து சோதனை செய்த போது உள்ளே இருந்ததைப் பார்த்து அசடு வழிந்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர்
திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு நேற்று இரவு 7.30 மணி அளவில் அடையாளம் தெரியாத சுமார் 52 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் கையில் பெரிய பார்சலுடன் வந்துள்ளார். அவர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கலைச்செல்வியை சந்திக்க வேண்டும் எனக்கேட்டுள்ளார்.
ஆனால் அவர் அப்போது காவல் நிலையத்தில் இல்லை என தெரிவித்துள்ளனர். அவரை சந்தித்து பரிசு பொருள் கொடுப்பதற்காக வந்ததாக கூறியுள்ளார். குற்றப்பிரிவு ஆய்வாளர் கலைச் செல்வி காவல் நிலையத்தில் இல்லாததால் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸாரிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
ஆய்வாளர் அடைந்த பதற்றம்
இரவு 8.30 மணி அளவில் ஆய்வாளர் கலைச்செல்வி காவல் நிலையம் நிலையம் வந்த போது பரிசுப்பொருள் சம்பந்தமாக காவலர்கள் தகவல் தெரிவித்து பரிசுப்பார்சலை கொடுத்துள்ளனர். பார்சலைப்பார்த்து சந்தேகமடைந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் எனக்கு பார்சல் தரும் நபர்கள் யாரும் இல்லையே இது ஏதோ சதி என்று உடனடியாக திருவல்லிக்கேணி உதவி ஆணையரிடம் தகவலை தெரிவித்துள்ளார்.
சந்தேகமடைந்த உதவி ஆணையர், அலறிய ஸ்டேஷன்
திருவல்லிக்கேணி உதவி ஆணையர் பரிசு பெட்டியைப் பார்த்து சந்தேகமடைந்து டிச.6 மசூதி இடிப்புத்தினம் என்பதால் பார்சலில் என்ன இருக்கிறது என்று தெரியாது, வெடி பொருள் கூட இருக்கலாம் என்பதால் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு எஸ்சிபி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துள்ளார். பின்பு குற்றப்பிரிவு காவலர்கள் பரிசு பெட்டியை சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி அருகே உள்ள மைதானத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்
மோப்ப நாய் பாம் ஸ்குவாடு சோதனை
சிறிது நேரத்தில் அங்கு வந்த வெடி குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு ஆய்வாளர் ஜெயராமன் தலைமையிலான குழுவினர் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி அருகே உள்ள மைதானத்திற்கு ரேம்போ என்ற மோப்ப நாயுடன் வந்து 9.50 மணி முதல் 10.05 மணி வரை சோதனை செய்தனர். பாதுகாப்பு கவச உடையுடன் ஜாக்கிரதையாக பரிசு பெட்டியை கையால் திறந்து பார்த்துள்ளனர். உள்ளே ரெண்டு இரும்பு டப்பாக்கள் இருந்ததைப்பார்த்து அதையும் ஜாக்கிரதையாக திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த பொருளை பார்த்து அனைவரும் சிரித்து அசடு வழிந்துள்ளனர்.
அடடே உள்ளே இருந்தது இதுதான்
இதற்காகவா இத்தனை பதற்றத்துடன் முயற்சி எடுத்தோம் என சிரித்துள்ளனர். சார் நாங்க ஜீப்பில் எடுத்து வந்தபோது எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தோம் தெரியுமா என போலீஸார் வெடிகுண்டு நிபுணர்களிடம் சொல்லி சிரித்துள்ளனர். காரணம் பார்சல் டப்பாவிற்குள் இரண்டு டப்பாக்களில் பாதாம் பருப்பு மற்றும் சாக்லேட் இருந்துள்ளது.
மர்ம நபர் யார் போலீஸ் விசாரணை
படுபாவி கொஞ்ச நேரத்தில் ஸ்டேஷனை அலறவைத்து எங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரித்துவிட்டானே யார் அது என போலீஸார் விசாரிக்க பரிசு பெட்டியை வாங்கிய போலீஸாருக்கு தெரியவில்லை. யார் எதைக்கொண்டு வந்து கொடுத்தாலும் வாங்கிக்கொள்வீர்களா என மேலதிகாரிகள் போலீஸாரை கண்டித்தனர். பரிசுப்பொருளை கொண்டு வந்த நபர் யார் என சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.
நேற்றிரவு 8 மணி முதல் திருவல்லிக்கேணி போலீஸாரையும் தொடர்ந்து உயரதிகாரிகளையும் கலங்கடித்த மர்ம பார்சலும், அதை கொண்டு வந்து தந்த நபரையும் தீவிரமாக போலீஸார் தேடி வருகின்றனர். இது போலீஸார் இடையே நகைச்சுவையாக பேசப்படுகிறது.