திருச்சியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான சொத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு..
திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ஆதீன மடங்களில் தொன்மையான பழமையான மிகவும் பிரபலமான மடங்களில் தருமபுர ஆதீன மடமும் ஒன்று”, தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சாரங்களை பறைசாற்றும் இந்த மடத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு நிலங்களும், கோவில்களும் உள்ளன. இக் கோவில்களை தருமபுர ஆதீன மடம் நிர்வாகிகள் பராமரிப்பு செய்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்கள் மூன்றாம் நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், வருவாய்துறை அதிகாரிகளின் துணையுடன் பல லட்சங்களை வாங்கிக் கொண்டு முறைகேடான வழியில் பட்டா பெற்றுள்ளனர்.
திருச்சியில் உள்ள உலக புகழ் பெற்ற தலங்களில் ஒன்றாகவும் மற்றும் தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரது பாடலிலும் இடம் பெற்ற உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோவிலுக்கு அருகே சுமார் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் நிலங்கள் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இடம் குறித்து கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மேற்படி சொத்து தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கப்பட்டும், இதுவரை ஆக்கிரமிப்பு செய்த நபர்களிடமிருந்து இடம் மீட்கப்படவில்லை எனவும் இது குறித்து திருச்சி வருவாய் கோட்டாட்சியிருக்கும் மற்றும் வருவாய் வட்டாட்சியருக்கும் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, பல கோடி மதிப்புள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தினை மீட்டு ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என சாவித்திரி துரைசாமி தமது மனுவில் கோரி இருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில், தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான இடங்கள் என்பதற்கான பல்வேறு ஆவணங்களை நீதிபதிகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டன, அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் மீது திருச்சி மாவட்ட வருவாய்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன…? என்று கேள்வி எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது யார்..? யார்..? என்ற முழு விவரத்தையும் அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை மறு தேதிக்கு ஒத்தி வைத்தனர்.