போலி பட்டா விவகாரத்தில் முன்னாள் நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த திருச்சி கோட்டாட்சியர் அருள்..!!!
திருச்சி மாவட்டத்தின் முன்னாள் நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகும் கூட திருச்சி வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு போலியான அரசு ஆவணங்களை ஏற்படுத்தி பல நகரளவை எண்களுக்கு திருத்தம் செய்ய வழங்கப்பட்ட ஆணை குறித்து “நிழல் உலக தாதா போன்று தலைநகரில் இருந்து கொண்டே திருச்சியை ஆட்டிப் படைக்கும் ஆய்வாளர்” என்ற தலைப்பில் நமது T நியூஸ் செய்தி குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்ற நிலையில் திருச்சி மாவட்ட நில அளவை உதவி இயக்குனரின் ஒப்புதல் இல்லாமலே போலி பரிந்துரை கடிதங்கள் பலவும் திருச்சி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றதன் அடிப்படையில் நகரளவை கணக்கில் திருத்தம் மேற்கொள்ள ஆணை பிறப்பித்துள்ளனர்.
திருச்சி சர்வதேச விமான நிலைய ஒட்டிய அமைந்துள்ள பல கோடி மதிப்பிலான சொத்தானது திருச்சி கிழக்கு வட்டம், கொட்டப்பட்டு கிராமம், வார்டு AW, பிளாக் – 11, நகரளவை எண்கள்: 7, 8/1, 8/2, 9/1, 9/2, 11/1, 11/2, 12, 13/1, 13/8 மற்றும் வார்டு AW, பிளாக்- 03, நகரளவை எண்கள்: 91/1, 92/1, 92/2, 93/1, 93/2, 94/2, 94/3, 95/1, 95/2, 96/1, 96/2 -ல் உள்ள நிலத்தின் நகரளவை கணக்கில் பழைய புல எண் திருத்தம் செய்திடக் கோரி, திருச்சி-21, கே. கே. நகர் அஞ்சல், மகாலெட்சுமி நகர், எண்: 24-D என்ற விலாசத்தில் வசிக்கும் அப்துல் ஹக்கீம் அவர்களின் மகன் திரு. ஜமாலுலுர் ரஜாக் என்பவர் திருச்சி வருவாய் கோட்டாட்சியரிடம் கடந்த 05-02-2024 தேதியன்று மனு செய்து இருந்தார்.
மேற்படி நகரளவை கணக்கில் பழைய புல எண் திருத்த மனுவின் மேல் நடவடிக்கைக்காக திருச்சி கிழக்கு வட்டாட்சியரிடமோ அல்லது அதிகாரம் பெற்ற வேறு எந்த வருவாய் துறை அதிகாரிகளிடமும் அறிக்கை கேட்டு குறிப்பாணை கூட வழங்காமல், ஏற்கனவே கோவில் நிலத்தில் போலி பட்டா வழங்கிய குற்றச்சாட்டில் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட கோட்ட ஆய்வாளர் ராஜ்குமாரிடம் மனுதாரரின் மனு செய்த தேதிக்கு 13 நாட்களுக்கு முன்பாக எந்தவித குறிப்பானை கடிதமும் வழங்காமல் தன்னிச்சையாக ஒரு அறிக்கையை பெற்றது போன்ற போலியான அறிக்கையை தயார் செய்து அதன் அடிப்படையில் மட்டும் மனுதாரரை கூட விசாரணை செய்யாமல் முன்னாள் வருவாய் கோட்டாட்சியர் இரா.பார்த்திபன் ஆணை
(ப.மு.(அ3)/819/2024)
வழங்கியுள்ளார். இதற்காக பல லட்சம் வரை பணம் கைமாறியதாகவும் ஆட்சியரக அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
அதன்பின் திருச்சி கோட்டாட்சியர் அலுவலக கடித எண் ப.மு.(அ3).819/2024 க்கான ஆணை முறையாக தபால் வழியாக திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓட்டுநராக பணி செய்யும் ஒருவரின் சகோதரர் மூலமாக திருச்சி கிழக்கு வட்டாட்சியருக்கு ஆணையை கொடுத்து அனுப்பிய கோட்ட ஆய்வாளர் ராஜ்குமார் சென்னையில் இருந்து கொண்டே திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலக அலுவலர்களின் செல்போனில் இடைவிடாமல் அழைத்து தொடர் நெருக்கடி கொடுத்து மேற்படி 21 நகரளவை எண்ணிற்கும் கணினி வழியாக நகரளவை திருத்த மனுவினை பதிவேற்றம் செய்ய பல மணி நேரமாக எந்தவித அலுவலக பணியும் செய்யவிடாமல் ஒரு கோப்பிற்கு மட்டும் பணி செய்தும், சம்பந்தப்பட்ட மண்டல துணை அலுவலரின் ஒப்புதல் இல்லாமலே அவருடைய கணினி கடவுச் சொல்லை முறைகேடான வழியில் கோட்ட ஆய்வாளர் ராஜ்குமார் ஒப்புதல் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ் விவகாரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சென்ற நிலையில் திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து இணையதள வாயிலாக 21 நகரளவை எண்களுக்கு பதிவேற்றம் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் ரத்து செய்து கோட்ட ஆய்வாளர் ராஜ்குமாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அடுத்தடுத்து அதிரடியாக நடவடிக்கையை எடுத்து வருகின்றார் கோட்டாட்சியர் அருள்…. என்ற தகவல் வெளியாகி உள்ளது
கடந்த சில மாதங்களாகவே, முன்னாள் கோட்ட ஆய்வாளர் ராஜ்குமாருடன் கூட்டு சேர்ந்து வருவாய் துறை அலுவலர்கள்
திருச்சி மேற்கு மற்றும் திருச்சி கிழக்கு வட்டங்களில் சம்பந்தப்பட்ட வட்ட அலுவலர்களின் கவனத்திற்கு செல்லாமலே பட்டா தொடர்பான கணினி பயனர் சொல் மற்றும் கடவுச் சொல் தவறாக பயன்படுத்தி பல பட்டா பெயர் மாற்றங்கள் செய்துள்ளனர்
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்.. என்ற பழமொழிக்கு ஏற்ப அம்பு தானாக வில்லிலிருந்து பாய முடியாது. அந்த அம்பை எய்தவன் இருக்க, அம்பை எய்திருக்கும் அவனை நோவாமல் அம்பை நோவது (குறை கூறுவது) எப்படி..?
குற்றம் செய்த ஒருவர் இருக்க மற்றவர்களை குறை சொல்லி என்ன பயன்..!!