தருமபுர ஆதீன நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைக்காத அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் -நீதிபதிகள் கடும் எச்சரிக்கை
தருமபுர ஆதீன மடங்களின் சொத்து விவரங்களை பதிவுத்துறை தலைவர் தாக்கல் செய்யவும் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் எப்போது ஆய்வு மேற்கொண்டனர் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி….
இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் உள்ள படி தமிழகத்தில் மொத்தம் 56 ஆதீன மடங்களும், அதற்கு கீழே 57 கோயில்கள் இருப்பதாகவும் குறிப்பு இருக்கிறது.
தமிழகத்தில் இருக்கும் 36,590 கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும் 56 மடங்களுக்கு கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் இருப்பதாக அறநிலையத்துறையின் தகவல் தெரிவிக்கிறது.
தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்து கிடக்கின்றன.
தருமபுரம் ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மக்களுக்குக் குத்தகை விடப்படுகின்றன, வாடகைக்கும் விடப்படுகின்றன, இவற்றின் மூலமாக பல மடங்கு வருமானம் வருகின்றது.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் மற்றும் தலைவரான ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். தமிழகத்திலிருக்கும் கோயில், ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான நிலங்களை அளந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம்.
உயர் நீதிமன்றமே தருமபுர ஆதீன நிலங்களின் உள்ள ஆக்கிரமிப்பு குறித்த தகவல்களைக் கேட்டறிந்து, அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக இணைத்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவு வழங்கியிருந்தது.
இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ள 55,820 ஏக்கர் நிலங்கள் ஆதீனங்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆதீன மடங்களுக்கு உரிய நிலத்தை அளந்தால் இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் நிலங்களை மீட்க முடியாத சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. கண் துடைப்புக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை விற்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் ஆனால், அதை வாங்கும் நடுத்தர மக்கள்தான் சிக்கிக் கொள்கிறார்கள்.கோயில், ஆதீன, மடங்களின் பட்டா, புறம்போக்கு நிலங்களுக்கு `தரும சாசன சொத்துகள்’ என்று பெயர். `இந்த தரும சாசனச் சொத்துகளை யார் வாங்கி பட்டா போட்டுக் கொண்டாலும், அது செல்லாது’ என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது.
பொது மக்கள் யாரும் கோயில் மற்றும் ஆதீன, மட நிலங்களை வாங்கி ஏமாற வேண்டாம். அந்த நிலங்கள் மீண்டும் தன்னிச்சையாக திருக்கோயில் வசம் வந்துவிடும். தருமபுரம் ஆதீன நிலங்களை விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும்படி உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.
மேலும் `சிவன் சொத்து குல நாசம்’ என்பார்கள். பல்வேறு கால கட்டங்களில் நம் முன்னோர்களால் தானமாக, புனித காரியங்களுக்காக அளிக்கப்பட்ட நிலங்களை அத்துமீறி அனுபவிப்பது என்பது தவறான செயல். தர்ம சாசன ஆதீன சொத்துகளை முறைகேடாக வாங்கியவர்களே கோயிலுக்குத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத் துறையும், ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை மீட்க போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.