திருச்சி, ஏப்.12-
முறையாக புக்கிங் செய்பவர்களுக்கு மணல் தர மறுக்கப்படுவதாகவும், சட்டவிரோதமாக குவாரியில் மணல் எடுப்பவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாகவும் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் நல சம்மேளன தலைவர் தெரிவித்தார்.
*அதிகாரிகளுடன் சந்திப்பு*
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் நல சம்மேளன மாநில தலைவர் ஆர்.பன்னீர் செல்வம் தலைமையிலான மணல் லாரி உரிமையாளர்கள் நேற்று மாலை திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் தலைமை பொறியாளரை சந்தித்து பேசிய பின்னர் மாநில தலைவர் பன்னீர்செல்வம் கூறியதாவது:-
*சட்டத்துக்கு புறம்பாக மணல் எடுப்பு*
நாகை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வடரங்கம், புன்னை ஆகிய 2 இடங்களில் அரசின் மணல் குவாரி உள்ளது. அந்த குவாரிகளில் முறையாக புக்கிங் செய்து நேற்று மணல் எடுக்க எங்கள் சங்கத்தை சேர்ந்த லாரிகள் சென்றன. 3 ஆண்டுகாலம் வறுமையில் நாங்கலள் சிக்கி தவித்த சூழ்நிலையில், தற்போது முதல்-அமைச்சர் இந்த 2 மணல் குவாரிகளை திறக்க அனுமதி அளித்திருக்கிறார். அதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இநத நிலையில் நேற்று மணல் ஏற்ற சென்ற லாரிகள், அங்கு சட்டத்திற்கு புறம்பாக நிறைய தவறுகள் நடந்திருப்பதை உணர்ந்தனர். மேலும் மணல் பெறாமல் ரொம்ப வறுமையில் இருக்கிற லாரி உரிமையாளர்கள் அங்கு முட்புதரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 25-க்கும் மேற்பட்ட லாரிகள் சீர்காழிக்கும், வைத்தீஸ்வரன் கோவிலுக்கும் இடையே காட்டுப்பகுதிஉயில் நிற்கின்றன.
*கோர்ட்டில் வழக்கு*
70-க்கும் மேல் அவர்களாகவே செட்டப் செய்த லாரிகள், அதிக பாரம் ஏற்றிக்கொண்டு வெளியில் சென்றன. சில சமூக விரோதிகள் அங்கிருந்து கொண்டு எங்கள் லாரிக்காரர்களை மிரட்டுகிறார்கள். உண்மையாக புக்கிங் செய்து மணல் பெற சென்ற லாரிகள் மணல் பெற முடியாமல் தவித்து கொண்டிகிருக்கிறது.
அது தொடர்பாக தலைமை பொறியாளர் மற்றும் இதர அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளோம். அதிகாரிகள் விசாரித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், அதில் உள்ள குறைகளை களைவதாகவும் கூறி இருக்கிறார்கள். அடுத்து சென்னை சென்று துறை அமைச்சர், முதல்-அமைச்சர், தலைமை செயலாளர் ஆகியோரை சந்தித்தும் மனு கொடுத்து முறையிட உள்ளோம். அதையும் மீறி இதே சூழல் நிலவினால், நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர உள்ளோம்.
*திருட்டு மணல்*
அரசு உத்தரவுப்படி 6 சக்கர வண்டிக்கு 2 யூனிட் மணலும், மல்டி ஆக்சல் என்று சொல்லக்கூடிய 10 சக்கர வண்டிக்கு 3 யூனிட் மணலும்தான் ஏற்றி கொண்டு செல்ல முடியும்.
அதற்கு அதிகமாக கொண்டு சென்றால், அது திருட்டு மணலாகத்தான் கருதப்படும். இது எல்லா வகையிலும் எங்களை பாதிக்கிற செயல் ஆகும். அதை சரி செய்யவும் எடுத்து கூறி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது மாநில செயலாளர் சேலம் கண்ணையன், துணைத்தலைவர் பழனிசாமி, திருச்சி மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், திருச்சி-அரியலூர் தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Post