திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் வியாழக்கிழமை வீட்டில் புகுந்து ஒன்பதரை சவரன் நகை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்ற கொள்ளையர்கள் குறித்து துவரங்குறிச்சி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணப்பாறை அடுத்த திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை யாகபுரம் தெற்கு பகுதியில் வசித்து வருபவர் சண்முகபிள்ளை மகன் லாரி ஓட்டுனர் முருகானந்தம்(56). இவர் விராலிமலை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தம் அடிப்படையில் லாரி ஓட்டி வருகிறார். வழக்கம்போல் வியாழக்கிழமை முருகானந்தம் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் இருந்தவர்கள் அருகே மருங்காபுரி பகுதியில் நடந்த துக்க நிகழ்வுக்கு சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் மூவர், பீரோ லாக்கரை உடைத்து அதிலிருந்த இருந்த 9 ½ சவரன் நகை மற்றும் நகைகள் அடகு வைத்த ரசீதுகள் இருந்த கைப்பை ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். கொள்ளையர்கள் காரில் தப்பி சென்றதாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள், கைரேகை பதிவுகள் ஆகியவற்றை சேகரித்து துவரங்குறிச்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெடுஞ்சாலையில் தனித்து இருக்கும் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருடு போன வீட்டின் பகுதி: கொள்ளை நடைபெற்ற முருகானந்தம் வீடு.(உள்படம்) உடைக்கப்பட்ட பீரோ லாக்கர்.