திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைகுளத்தை சேர்ந்த அ.ஹரி நாடார் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தல் படி மாநில, மாவட்ட நிர்வாகிகளின் படி ஒப்புதலின் படி அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார்.”அதனால் ஹரி நாடாரின் கருத்திற்கோ, செயலுக்கோ இனி பனங்காட்டுப் படை கட்சி பொறுப்பேற்காது. பனங்காட்டுப் படை உறவுகள் இவரோடு இனி கட்சி அரசியல் செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு பனங்காட்டுப் படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவிடம் இருந்து அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.ஹரி நாடாரை பொறுத்தவரை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவை சேர்ந்த ஒருவருக்கு கடன் வாங்கிக் கொடுப்பதாக பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமியை மிரட்டி அவரை தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.அதிமுக ஆட்சியிலேயே ஹரி நாடார் மீது விஜயலட்சுமி புகார் அளித்திருந்தாலும், அப்போது அது கிடப்பில் போடப்பட்ட நிலையில் இப்போது தூசு தட்டி எடுக்கப்பட்டு விசாரணை வேகமெடுத்திருக்கிறது. பைனான்சியர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி, நாடார் சங்க செயற்பாட்டாளர் என ஹரி நாடாருக்கு பல முகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.