குண்டூர்: பாஜகவினரின் கடும் நெருக்கடிக்கு இடையே குண்டூர் ஜின்னா கோபுரத்திற்கு மூவர்ணம் பூசப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ளது ஜின்னா கோபுரம். இந்தக் கோபுரத்தின் பெயரை மாற்ற வேண்டும் என பாஜகவினர் அண்மைக்காலமாக சர்ச்சையை எழுப்பிவருகின்றனர்.
இதுதவிர கடந்த ஜனவரி 26 ஆம் தேதியன்று இந்து அமைப்பான இந்து வாஹினியைச் சேர்ந்த சிலர் ஜின்னா கோபுரத்தின் மீது ஏறி தேசியக் கொடியை ஏற்ற முயன்றனர். இதனால் சர்ச்சை மேலும் வலுப்பெற்றது. இதனையடுத்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து ஜின்னா டவர் பகுதியால் சர்ச்சைகள் உருவாகிவந்த நிலையில் குண்டூர் கிழக்கு தொகுதி எம்எல்ஏ முகமது முஸ்தஃபா ஏற்பாட்டில் ஜின்னா கோபுரத்துக்கு மூவர்ணம் பூசப்பட்டுள்ளது.
இது குறித்து அவர், “பல்வேறு அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜின்னா கோபுரத்துக்கு மூவர்ணம் பூசப்பட்டுள்ளது.
அருகிலேயே ஒரு கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நாளை வியாழக்கிழமை தேசியக் கொடி ஏற்ற உரிய நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் ஜின்னா கோபுர சர்ச்சை தொடங்கியது. பாஜகவினர் ஜின்னா கோபுரத்திற்கு குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பெயரைச் சூட்ட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கோபுரத்தை சேதப்படுத்துவோம் என்றும் கூறி சர்ச்சையைக் கிளப்பினர்.
இந்நிலையில், குண்டூர் ஒய்எஸ்ஆர்சி எம்எல்ஏ, முஸ்தஃபா கோபுர சர்ச்சைக்கு முடிவு கட்டியுள்ளதோடு பாஜகவினரையும் விமர்சித்துள்ளார்.