2022 சட்டசபை கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி நிகழ்த்த போகும் அறிமுக உரை அதிக கவனத்தை பெற்றுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் ஜனவரி 5-ந் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. அதிகப்பட்சம் இந்த கூட்டத் தொடர் ஜனவரி 8 அல்லது 10-ந் தேதி வரை நடக்கலாம் என்கிறார்கள் சட்டமன்ற பணியாளர்கள்.திமுக ஆட்சி பொறுப்பேற்றதையடுத்து அப்போதைய கவர்னர் பன்வாரிலால் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய கூட்டத்தில், அவரது உரையின் முடிவில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையும், மத்திய அரசு என்ற வார்த்தையும் இல்லாதது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, கவர்னர் உரை என்பது ஆளும் கட்சியின் நிதித்துறை தயாரித்துக் கொடுக்கும் உரை.
அரசு தயாரித்து தரும் உரையைதான் ஆளுநர் வாசிக்க வேண்டும். அதனை அப்படியே பேரவையில் ஆளுநர் வாசிப்பதுதான் வழக்கம். இது ஒருபுறமிருக்க, ஆட்சிக்கு வருவதற்கு முன் மத்திய அரசு என பல ஆண்டுகளாக அழைத்து வந்த திமுக, தனது நிலைப்பாட்டை மாற்றியைமைத்துக் கொண்டு, ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து , ‘ஒன்றிய அரசு’ என அழைத்து வருகிறது. இது தேசிய அளவில் கவனமும் பெற்றுள்ளது.
சட்டசபை கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு பற்றிய விவாதமும், ஜெய் ஹிந்த் பற்றிய விவாதமும் பெரிய கவனம் பெற்றது. ஒன்றிய அரசு என்ற வார்த்தை பிரயோகம் தவறு கிடையாது. அரசியலமைப்பு சட்டத்திலேயே இப்படித்தான் இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இப்படிப்பட்ட சூழல்களின் பின்னணியில்தான் ஆர்.என்.ரவியின் உரையுடன் 2022 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டம் நடக்கிறது.ஆர். என் ரவியின் உரையை திமுக அரசின் நிதித்துறை தயாரித்துள்ளது. ஜனவரி 1-ந்தேதி அவரது உரையின் ஆங்கில வடிவத்தை ராஜ்பவனுக்கு அனுப்பிவைக்க திமுக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த உரையில், மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு உரை தயாரிக்கப்பட்டிருக்கிறதாம். அதேபோல, central என்ற வார்த்தையும் இதில் இடம்பெறப்போவதில்லை, யூனியன் என்றுதான் இருக்கும் என்று தகவல்கள் வருகின்றன.