உலகளவில் செல்வாக்குள்ள தலைவர்களில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம்.. அமெரிக்க ஆய்வு அமைப்பு தகவல்!
உலகளவில் பிரபலமான தலைவர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 71 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட்டிங் அமைப்பு 71% ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடியை உலகின் மிகவும் பிரபலமான தலைவராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 66 சதவீத ஆதரவு பெற்று இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இதில் 6வது இடத்தைப் பெற்றிருக்கிறார்.
இந்த ஆண்டு ஜனவரி 13 முதல் 19 வரையில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வின் தரவரிசையை வெளியிட்டிருப்பதாக அமெரிக்க கன்சல்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் இந்திய மக்களில் 71 சதவீதம் பேர் இந்தியா சரியான திசையில் பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்து, பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 29 சதவீதம் பேர் இந்தியா தவறான திசையில் சென்று கொண்டிருப்பதாக இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு நிறுவனம் உலகின் முக்கியமான 13 தலைவர்களை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வு முடிவின்படி, இந்திய பிரதமர் மோடி 71 சதவீதத்துடன் முதலிடத்திலும், மெக்சிகோவின் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் (66 சதவீதம்), இத்தாலியின் மரியோ ட்ராகி (60 சதவீதம்), ஜப்பானின் ஃபுமியோ கிஷிடா (48 சதவீதம்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் தலா 43 சதவீத அங்கீகாரம் பெற்று முறையே ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். ‘பார்ட்டிகேட்’ ஊழலில் சிக்கிய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், 26 சதவீத பேர் ஒப்புதல் மட்டுமே பெற்று கடைசி இடத்தைப் பெற்றுள்ளார். கடந்த 2020 மே மாதம் பிரதமர் மோடி 84 சதவீத ஆதரவை பெற்றிருந்தார். 2021 மே மாதத்தில் 63 சதவீதமாக சரிந்தது. ஆனால் அந்த ஆதரவு தற்போது 71 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மார்னிங் கன்சல்ட் தெரிவித்துள்ளது.
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற முதல் மாதங்களில் 50 சதவீதத்திற்கு மேல் ஆதரவை வைத்திருந்தார். அதன்பிறகு, கொரோனா தொற்றை முறையாக கையாளவில்லை என்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் அவசரமாக திரும்பப் பெறப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பைடனின் புகழ் குறையத் தொடங்கியது.