Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

குடும்பத் தகராறில் மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

0

குடும்பத் தகராறில், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம்  மணச்சநல்லூர் வட்டம் வடக்கு ஈச்சம்பட்டியைச் சேர்ந்தவர்கள் பாலச்சந்திரன் (43) } மகாலட்சுமி (36) தம்பதியர். சம்சா வியாபாரியான பாலச்சந்திரன் சிங்கப்பூர் சென்று தொழிலாளியாக வேலை பார்த்து வந்தாராம். சில ஆண்டுகள் சம்பாதித்த நிலையிலும் அவர் அனுப்பிய பணத்தை மகாலட்சுமி முறையாகப் பயன் படுத்தாமல் செலவு செய்தாராம். இதனால் விரக்தியடைந்த அவர் மீண்டும் மண்ணச்சநல்லுருக்கே வந்து சம்சா வியாபாரத்தில் இறங்கியுள்ளார்.
கடைகளுக்கு மொத்தமாக சம்சா விநியோகிக்கும் வகையில் தொழில் செய்து வந்த அவர், தொழிலுக்கு உதவியாக மனைவியும் இருந்து வந்துள்ளார். அதிகாலை 4 மணிக்கு எழுந்து இரவு, வெகு நேரம் வரையில் விழித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மகாலட்சுமிக்கு பிடிக்கவில்லை. எனவே, மீண்டும் சிங்கப்பூர் சென்று வேலை செய்யுமாறு கணவரை அவர் நச்சரித்து வந்துள்ளார்.
இதனால் பாலசந்திரனுக்கு மனைவி மீது சந்தேகமும் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக அடிக்கடி குடும்பத் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2019 ஆவது ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி அதிகாலை, இருவரும் வீட்டில் சம்சா செய்து கொண்டிருந்தபோது, கணவன் மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் தள்ளு முள்ளு ஏற்படவே கோபத்தின் உச்சிக்கு சென்ற பாலச்சந்திரன் அருகே கிடந்த வெங்காயம் வெட்டும் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மகாலட்சுமி உயிரிழந்தார். இதனையடுத்து அவர் சரணடைந்தார். பின்னர் சம்பவம் தொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு, திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதில் செவ்வாய்க்கிழமை மாலை தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவத்சன், சம்சா வியாபாரி பாலச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். வழக்கில் அரசுத்தரப்பு வழக்குரைஞராக ஜாகிர்உசேன் ஆஜரானார்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்