கடந்த ஆட்சியில் தி.மு.க.வின் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்தான் செல்வம். சட்டமன்றத்தில் நடந்த களேபரத்தின் போது சபாநாயகர் தனபாலை டீஸ் செய்த தி.மு.க.. எம்.எல்.ஏ.க்களில் முக்கியமானவர் இவர் என்பதை யூடியூப் சொல்லும் ஆதாரத்துடன். அதன் பின் சில சொந்த பஞ்சாயத்துகளுக்காக எம்.எல்.ஏ.வாக இருக்கும்போதே பா.ஜ.க.வில் சென்று இணைந்தார்.
ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியமைந்துவிட்ட நிலையிலும், தான் நினைத்து போன காரியம் அங்கே நிறைவேறாத நிலையிலும் மீண்டும் தாய்க்கழகத்துக்கே திரும்ப வந்துவிட்டார். வந்தவர், வந்த ஜோரிலேயே தலைமை கழக பதவி ஒன்றை பிடிக்க கடும் முயற்சியில் உள்ளார். அவருக்கு அந்தப் பதவியை வாங்கிக் கொடுத்துவிடுவாரோ என்று அமைச்சர் சேகர் பாபு மீது கடும் கோபத்தில் உள்ளனர் சென்னை தி.மு.க.வினர். காரணம், அவர் மூலமாகதான் மீண்டும் தி.மு.க.வினுள் நுழைந்தார்.
இதனால் கு.க.செல்வத்தை எங்கே பார்த்தாலும் கடுமையான காண்டில் உள்ளனர் தி.மு.க.வினர். இந்த நிலையில், சமீபத்தில் அறிவாலயத்தில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலினை சந்திக்க தி.மு.க.வினர் வரிசையில் நின்றனர். அப்போது அங்கு வந்த கு.க.செல்வம் எல்லோரையும் ஒழுங்கு படுத்துகிறேன் பேர்வழியென்று ஓவராய் அதட்டி, உருட்டியிருக்கிறார். தூரத்தில் முதல்வர் கார் வரும் சத்தம் கேட்க, இவரோ வரிசையில் நின்றவர்களை தள்ளிவிட்டு, ‘தலைவர் வர்றார் தள்ளி நில்லு’ என்றிருக்கிறார்.
தள்ளப்பட்டதால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற ஒரு தி.மு.க. நிர்வாகி “உன் தலைவர் பி.ஜே.பி. அண்ணாமலைதானே? அவரு எதுக்கு அறிவாலயத்துக்கு வர்றாரு, ஒத்திக்கோ ஒத்திக்கோன்னு கூவுற? நானெல்லாம் கறுப்பு வெள்ளை காலத்துல இருந்து தி.மு.க. காரன். கட்சி எவ்வளவு சரிவை சந்திச்சப்பவும் வெளியில போகாம விசுவாசமா இருந்தவன். உன்ன மாதிரி பச்சோந்தி இல்ல’ என்று விளாசி தள்ளியிருக்கிறார்.
சுற்றி நின்ற நிர்வாகிகள், கட்சியினர் கைதட்ட, முகம் சுருங்கி நகர்ந்துவிட்டாராம் கு.க.செல்வம்.