கடந்த மாதம் உடுப்பி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தனர்.
அவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படாததால் ஹிஜாப் சர்ச்சை தொடங்கியது. இது நாள் வரை ஹிஜாப் அணியாமல் வந்த மாணவிகள் திடீரென ஹிஜாப் அணிந்து வர ஆரம்பித்து விட்டதாக பள்ளி அதிகாரிகள் கூறினர். மாணவிகள் ஹிஜாப் அணியாமல் வகுப்புக்கு செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு எதிர்வினையாக முஸ்லிம் அல்லாத மாணவ-மாணவிகள் காவி நிறை துண்டுகளை உடுத்தி கல்லூரிக்கு வர ஆரம்பித்த நிலையில் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில், மாணவ- மாணவிகள் சீருடைகள் மட்டுமே அணிய வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் விரிவுரையாளர் ஒருவர் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என நிர்வாகம் கூறியதை அடுத்து ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, கல்வி நிறுவனங்களில் மத அடையாளங்கள் உள்ள ஆடைகள் வேண்டாம் என்ற இடைக்கால உத்தரவு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அனைத்து மாணவர்களும் சீருடைக் குறியீட்டைப் பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவு ஆசிரியர்களை கட்டுப்படுத்தாது என்றார்.
சி.ஜே. அவஸ்தி இது குறித்து மேலும் கூறுகையில், ” இதற்கான ஆணை தெளிவாக உள்ளது. சீருடை என ஒன்று பரிந்துரைக்கப்பட்டால், அது டிகிரி கல்லூரியாக இருந்தாலும் சரி, பியு கல்லூரியாக இருந்தாலும் சரி, அதை அவர்கள் பின்பற்ற வேண்டும்” என்றார்.
ஹிஜாப் தடைக்கு எதிராக சில முஸ்லிம் சிறுமிகளின் மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், இறுதி உத்தரவு வரும் வரை ஹிஜாப் மற்றும் காவி நிற சால்வையை பயன்படுத்த தடை விதித்துள்ளது.