பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உதவிய முன்னாள் மூத்த அமைச்சரின் உதவியாளர் மற்றும் ஓட்டுநரை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆவின் மற்றும் அரசுத் துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த இரு வாரங்களாக தலைமைறைவாக இருக்கிறார். பல தனிப்படைகள் அமைத்து அவரைத் தேடி வருகின்றனர் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார்.
ராஜேந்திரபாலாஜியோடு யார் யார் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை காவல்துறையின் சைஃபர் பிரிவினர் கண்காணித்ததில்… முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகனின் உதவியாளர் பொன்னுவேல் மற்றும் ஓட்டுநர் ஆறுமுகம் இருவரும் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியுடன் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்களோடு ராஜேந்திரபாலாஜி ஜோலார்பேட்டை வரை காரில் சென்றதும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து பொன்னுவேலுவை நேற்று டிசம்பர் 29ஆம் தேதி மதியம் தர்மபுரி மாவட்டத்தில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்தனர் போலீஸார்.
அப்போது அவர், “ராஜேந்திர பாலாஜி தர்மபுரி வந்தது உண்மைதான். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அரை மணி நேரம் காரில் இருந்தப்படி பேசிவிட்டு புறப்பட்டு விட்டார். முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் ஓட்டுநர் ஆறுமுகம்தான் ராஜேந்திர பாலாஜியை அழைத்து போனார்” என்ற வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அவரது வாக்குமூலம் அடிப்படையில் நேற்று இரவு ஓட்டுநர் ஆறு முகத்தையும் கூட்டிச் சென்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே போலீஸ் நெருக்கடி அதிகமாவதால்…. தன் மீது பண மோசடி புகார்கள் கொடுத்தவர்களுக்கு உரிய பணத்தைத் திரும்பக் கொடுக்க ராஜேந்திரபாலாஜியின் தரப்பினர் பேச்சுவார்த்தையைத் தொடங்கி விட்டனர். அவர்களிடம் பணத்தைத் திரும்பிக் கொடுத்துவிட்டு, புகார்களை வாபஸ் பெறச் சொல்வதன் மூலம் இந்த சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற ஒரு அறிவுரை ராஜேந்திரபாலாஜிக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
தனக்கு எதிரான இதேபோன்ற வழக்குகளில் ஒன்றில் அமைச்சர் செந்தில்பாலாஜியும் இப்படித்தான் புகார் தாரர்களிடம் பேசி புகாரை வாபஸ் வாங்க வைத்தார். அதன் அடிப்படையில் அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது. அதேபோல ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கமான பட்டாசு அதிபரும், ராஜேந்திரபாலாஜியின் சகோதரி மகன்களும் தற்போது மோசடி புகார் கொடுத்தவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, புகாரை திரும்பப் பெறுமாறு பேசி வருகிறார்கள்.
இந்த ஏற்பாடுகளை செய்துகொண்டே நீதிமன்றத்தில் சரண்டராக ராஜேந்திரபாலாஜி திட்டமிட்டிருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்