ராகுல் காந்தி எங்கே போனார்? 5 மாநில தேர்தல்கள் நடக்கிற நேரத்தில், ராகுலின் பிரச்சாரங்கள் குறைந்து காணப்பட காரணம் என்ன? ஏன் தீவிர பிரச்சாரத்தில் ராகுல் இறங்கவில்லை என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
நூற்றாண்டு பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சிக்கு 2 வருடமாக தலைவர் யாருமே இல்லை.. ஒரு தேசிய கட்சி தலைவரே இல்லாமல் இயங்கி கொண்டிருப்பது பெருத்த பலவீனமானதும்கூட.. சோனியா காந்திக்கு உடம்பு சரியில்லாத நிலையில், ராகுலும் பொறுப்பேற்காத நிலையில், இது சம்பந்தமாக கடிதம் எழுதி அதிருப்திக்கு உள்ளானவர்களை சமாதானப்படுத்த முடியாத நிலையில், வேறு தலைவர்களும் நியமனம் செய்ய முடியாத நிலையில், காங்கிரஸ் தள்ளாடிகொண்டிருக்கிறது.
இந்த பலவீனங்களை சரிக்கட்ட ராகுலும் களம் இறங்கினால் மட்டுமே ஓரளவு வாக்குகளை தக்க வைக்க முடியும் என்ற நிலைமை உள்ளது.. ஆனாலும் தன் பொறுப்பை உணராமல், ராகுல் காந்தி திடீரென கிறிஸ்துமஸ் விடுமுறையில் இத்தாலி புறப்பட்டு சென்றார்.. அப்போதே பாஜக, மற்றும் திரிணாமுல் கட்சியும் இதை ஒரு பிரச்சனையாக கிளப்பின.. அதற்கு பிறகு அவர் நாடு திரும்பியபோதும், 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும்கூட, பெரிதாக பிரச்சாரங்களில் பங்கேற்காதது, தொண்டர்களிடையே அதிருப்தியை பெருக்கி வருகிறது… குறைந்தபட்சம் உபி மாநிலத்தில்கூட ராகுலின் செயல்பாடுகள் குறைவாக உள்ளது, அதிர்ச்சியையே தந்துவருகிறது.
இதற்கு ஒரு சில காரணங்களும் சொல்லப்படுகிறது.. அமேதி எம்பி தொகுதியில் 2019ம் வருடத்தில் கிடைத்த அதிர்ச்சி தோல்வியே ராகுலின் ஆர்வமின்மைக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.. வயநாடு எம்பி தொகுதியில் ராகுல் வெற்றி பெற்றதால், அங்கே சில சமயம் செல்வதையும் காண முடிகிறது.. எனினும், உபி மிக முக்கிய தொகுதி என்பதால், குறைந்தபட்சம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவாவது ராகுல் தன்னுடைய பிரச்சாரத்தை முன்னெடுக்கலாம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. தவிர, பிரியங்கா என்ற ஒற்றை நபரால் மட்டுமே, உபி பாஜகவை சமாளிக்க முடியாத சூழல் உள்ளது..
ராகுலின் இந்த பின்னடைவு ஒருபக்கம் பாஜகவுக்கு சாதகமாக இருந்தாலும், இதை சமாஜ்வாதி கட்சி முழுமையாக பயன்படுத்தி கொள்ளும் என்றே தெரிகிறது.. சரத்பவார், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் இவர்கள் எல்லாம் ஒன்றுகூடும்போது, காங்கிரஸ் மேலும் அங்கு பலவீனமடையவே செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை.. பாஜகவுக்கு ட்விட்டர் மூலமே ராகுல் காந்தி பதிலடி தந்து கொண்டிருப்பது எந்த வகையிலும் சரியில்லை என்றே பெரும்பாலானோர் கருதுகிறார்கள்.. இந்த கருத்தை யார் வேண்டுமானாலும் ட்விட்டரில் பதிவு செய்யலாம், ஆனால் ராகுல்காந்தி, களத்தில் குதிக்க வேண்டிய தருணம் இது என்றும் எச்சரிக்கிறார்கள்..
ராகுல் முழுவீச்சில் இறங்கினால்தான், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மணிப்பூர், போன்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி கோதாவில் குதிக்கும்.. இல்லாவிட்டால் வழக்கம்போல் தேங்கி கிடக்கும் நிலைதான் இந்த முறை தேர்தலிலும் எதிரொலிக்கும்.. சுருக்கமாக சொல்லப்போனால், ராகுல்காந்தியின் பிரச்சார தீவிர தன்மை இல்லாமல் இருப்பதுதான், பாஜகவின் வெற்றிக்கு ஆகச்சிறந்த பலமாக இருக்க போகிறது என்று அரசியல் நோக்கர்கள் இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்..!