திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீஸ் சரகம் பேரூர் கிராமத்தில் உள்ள குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் நீலமேகம். இவர் காஷ்மீர் பகுதியில் துணை ராணுவ படை(சி.ஆர்.பி.எப்.) பிரிவில் வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி (வயது 29). இவர்களுக்கு 10 மாத கைக்குழந்தை உள்ளது. கலைவாணி தனது மாமனார், மாமியாருடன் பேரூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மின்சாரம் இல்லாததால் காற்றுக்காக கலைவாணி வீட்டின் கதவை திறந்து வைத்து வீட்டில் தூங்கினார். வீட்டின் வெளியே அவரது மாமனார், மாமியார் ஆகியோர் படுத்திருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர், கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 8½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவத்தில் கலைவாணிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.
முதல்-அமைச்சர், டி.ஜி.பி.க்கு வலியுறுத்தல்
இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து, மர்மநபரை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து கலைவாணியை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் துணை ராணுவ படைவீரர் நீலமேகம் காஷ்மீர் பகுதியில் இருந்து சமூக வலைதளம் மூலமாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோருக்கு, இந்த நகை பறிப்பு சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேசிய வீடியோவை அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் மத்தியத் துணை ராணுவப் படை சி.ஆர்.பி.எப்.-ல் தற்சமயம் காஷ்மீர் மாநிலத்தில் பணிபுரிந்து வரக்கூடிய கலைவாணியின் கணவர் நீலமேகம் தனது வீட்டில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் குறித்து ஒரு வீடியோ பதிவில் பேசி அதனை சமூக வலைதளமான வாட்ஸ்அப் மூலம் வெளியிட்டார் . மேலும் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறும் தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு கொடுக்குமாறும் தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேற்கண்ட வீடியோ பற்றித் தெரிந்தவுடன் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு 28-ந் தேதி இரவு பாதிக்கப்பட்ட கலைவாணி மற்றும் துணை ராணுவப் படை வீரரான நீலமேகம் ஆகிய இருவரையும் தொலைபேசி வழியாக உடனடியாகத் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறி சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவர் என்ற உறுதி மொழியை அளித்துள்ளார்.
மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடி கண்காணிப்பின் கீழ் ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, சந்தேக நபர்கள் சிலரிடம் செயின் பறிப்பு சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த செயின் பறிப்பு வழக்கை விரைந்து கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.