சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்ற போலி சாமியார்.! : பாலியல் வன்முறை செய்த கொடூரம்!!- போலி சாமியார் உட்பட 3 பேர் போக்சோவில் கைது!
திண்டிவனம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்த போலி சாமியார் உட்பட 3 பேரை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி கடந்த 13ம் தேதி வீட்டில் கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். அப்போது கீழ் ஆதனூர் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை நிறுத்தி சிறுமியை கட்டாயப்படுத்தி ஆட்டோவில் ஏற்றி உள்ளார்.
அப்போது சிறுமி திண்டிவனம் செல்வதாக கூறி உள்ளார். திண்டிவனத்தில் விடுகிறேன் என கூறி ஆட்டோ ஓட்டுனர் சிறுமியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மதுராந்தகம் அழைத்துச் சென்றுள்ளார். இதனிடையே சிறுமியை காணவில்லை என திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர். இதனிடையே சிறுமியை கடத்தியவர்கள் சிறுமியின் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு அதிலிருந்த சிம்மை எடுத்துவிட்டு வேறு சிம்மை போட்டு பயன்படுத்தி வந்தது தெரியவந்தது
இதன் பின்னர் செல்போனின் ஐஎம்இஐ எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வேறு ஒரு நபர் பேசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த எண்ணை ஆய்வு செய்து செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் கிராமத்தில் சிறுமி உட்பட மூன்று பேர் சிறுமியை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியை மீட்ட போலீசார் மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் திருக்கழுக்குன்றம் அடுத்த எடையாத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த போலி சாமியார் எல்லப்பன்(39) என்பதும், இவர் கடந்த 13ம் தேதி சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் எல்லப்பன் சிறுமியை கடத்தி சென்று மதுராந்தகம் அடுத்த சிறுபேர்பாண்டி கிராமத்தில் பிரபு என்கின்ற அப்பு(33) என்பவர் வீட்டில் அடைத்து வைத்ததும், போலீசார் தேடுவதை அறிந்து செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் புவனேஸ்வரி நகரில் சின்னப்பையன்(53) என்பவரது ஆட்டுக் கொட்டகையில் அடைத்து வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போலி சாமியார் எல்லப்பன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பிரபு, சின்னபையன் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் சிறுமியை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.