Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

ஒழுங்காக மட்டும் வேலை செய்யுங்க.. டிஜிபி பேச்சு

0

உங்கள் துறையில் முதல்வர்’திட்டத்தின் கீழ் காவல் துறையில் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், காவல் துறை மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான குறைதீர் முகாம் திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் இன்று நடைபெற்றது. குறைதீர் முகாமுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமை வகித்து, காவல் துறையினரிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.முன்னதாக பேசிய அவர், காவல் துறையினர் தைரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பணியாற்றும் வகையில், அவர்களது குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள சிறு தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார். இதையொட்டி, தமிழ்நாட்டில் சுமார் 1.33 லட்சம் காவல் துறையினர் மீது இருந்த சிறு தண்டனைகளை ரத்து செய்துள்ளதாகவும் கருணை மனுக்களின் அடிப்படையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் காவலர்கள் 366 பேரில் தண்டனை முற்றிலும் ரத்து செய்யப்பட்ட நிலையில், 164 பேரின் தண்டனைக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக, பணியில் இருந்து நீக்கப்பட்ட 51 பேர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டதாகவும் இதில், 21 பேர் பெண் காவலர்கள் என்று தெரிவித்த அவர், இதேபோல், விருப்பத்தின் அடிப்படையில் 1,353 பேருக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் கடந்த வாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பேசினார். மேலும் காவல் துறை பணி என்பது சவாலானது. அவர்களுக்கு போதுமான ஓய்வு அளிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று குறிப்பிட்ட அவர், அதனடிப்படையில், 5 நாட்கள் வேலை, 6 வது நாள் வேலை செய்தால் சிறப்பு ஊதியம், 7 வது நாள் ஓய்வு என்று சட்டத் திருத்தம் செய்து சலுகை வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும், ரிஸ்க் அலவன்ஸ் ரூ.800 லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், காவலர்கள் உற்சாகத்துடனும், சிறந்து பணியாற்றும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றும் நவீன அடையாள அட்டையைக் காண்பித்து பேருந்துகளில் இலவச பயணம் செய்வதற்கான அறிவிப்பு ஆணை விரைவில் வரவுள்ளது என்றும் கூறினார். முடிந்த அளவுக்கு காவலர்களின் குறைகளைப் போக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்ற அவர், அண்மையில் 800 பேருக்கு வாரிசு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், சில மாதங்களில் மேலும் 800 பேருக்கு அளிக்கப்படவுள்ளது என்றார். அதேபோல், காவல் துறையினரின் பிள்ளைகளுக்கு தனியார் நிறுவனங்கள், அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே காவல் துறையினர் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என பேசினார்.

குறைதீர் முகாமில் மத்திய மண்டல ஜஜி பாலகிருஷ்ணன், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர், தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஸ் குமார், திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் உட்பட 9 மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது மழை வெள்ள காலத்தில் பல்வேறு வகைகளில் சேவையாற்றிய பொதுமக்கள் மற்றும் காவல் துறையினருக்கு வெகுமதிகளை டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்