திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள குளத்துரோடு ரவுண்டானாவில் இருந்த கிரானைட் கல்லாலான வேலை மர்ம நபர் ஒருவர் உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள பழனி முருகன் கோவில் முருகனது சிறப்புடைய அறுபடை வீடுகளுள் ஒன்றாகும். இங்குள்ள முருகனது நவபாஷாண சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவில் அமைந்திருக்கும் பழனி பேருந்து நிலையம் அருகே குளத்துரோடு ரவுண்டானாவில் கிரானைட் கற்களால் ஆன வேல் உள்ளது.
இந்த வேலை அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் வேல் நிறுவப்பட்டிருக்கும் ரவுண்டானாவில் ஏறி அங்கிருந்த வேலை அடித்து உடைத்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தடுப்பதற்குள் வேல் உடைந்து கீழே விழுந்தது. சிலையை உடைத்த மர்ம நபரை பிடித்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த மர்ம ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து அந்த மர்ம நபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பழனியின் அடையாளமாக விளங்கி வரும் இந்த வேல் உடைக்கப்பட்ட செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.