செக்! கடந்த காலங்களில் நடந்த பதிவுத்துறை முறைகேடுகள்..குற்றவாளிகளை கண்டறிய தமிழக அரசு அதிரடி ஆக்ஷன்
பதிவுத்துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் பதிவுத்துறையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்ததாகத் தொடர்ந்து புகார்கள் உள்ளன. இதன் காரணமாகத் தமிழக அரசுக்குக் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறதுஇது தொடர்பாக உரிய விசாரணை நடத்திச் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பலரும் வலியுறுத்தி வருகின்றனர்இதற்கிடையே கடந்த காலங்களில் பத்திரப்பதிவு துறையில் நடந்த முறைகேடுகளைக் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொண்டு, அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக்குழு அமைக்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் ஒரு தலைவர், இரண்டு உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்புக் குழு ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு, நில மோசடி, வருவாய் இழப்பு, அரசு நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட புகார்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யும் எனத் தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த குழு அடுத்த 3 ஆண்டுகளுக்குச் செயல்படும் என்றும் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த குழுவானது ஆய்வு அறிக்கையைத் தமிழக அரசுக்கு அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் பதிவுத் துறைகளில் இதேபோன்ற மோசடிகள் நடைபெறுவதைத் தடுக்க தேவையான வழிமுறைகளை உருவாக்குவது குறித்தும் இந்த குழு ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கவுள்ளது. பத்திரப்பதிவு துறையில் ஏற்பட்ட தவறுகளால் பாதிக்கப்பட்ட மக்களும் இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் புகார் அளிக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.