சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.
Maridhas answers என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் மரிதாஸ் என்ற நபர் தொடர்ந்து திமுக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.இந்தச் சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன் அவரை தமிழ்நாடு போலீசார் மதுரையில் வைத்து கைது செய்தனர். பாலகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மரிதாஸ் கைது செய்யப்பட்டார்.தமிழகத்தையும் காஷ்மீரையும் இணைத்து சர்ச்சைக்குரிய மரிதாஸ் ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டை அவர் டெலிட் செய்துவிட்ட போதிலும், அந்த புகாருக்குத் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, சமூக நல்லிணக்கத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தேனி உத்தமபாளையம் கிளைச் சிறையில் உள்ள மாரிதாஸ் மீது இன்னொரு வழக்கும் பதியப்பட்டு அதில் அவர் கைதும் செய்யப்பட்டார். மாரிதாஸை வரும் டிசம்பர் 23-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மரிதாஸ் கைது செய்யப்பட்டதற்குத் தமிழ்நாடு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும் பாஜக தலைவர்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர். முன்னதாக நேற்றைய தினம் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தார்.இந்தச் சூழலில், இன்று சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவிவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்துப் பேசினார். தமிழ்நாடு அரசில் சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளதாக அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான சந்திப்பு நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘தமிழகத்தில் போலீசார் டிஜிபி கட்டுப்பாட்டிலேயே இல்லை. சைக்கிளில் செல்வதற்கும் செல்பி எடுப்பதற்கும் தான் இங்குத் தமிழக டிஜிபி உள்ளார். தமிழகத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்களும் ஐடி பிரிவினரும் தான் போலீசாரை கட்டுக்குள் வைத்துள்ளனர். அவர் நேர்மையான டிஜிபியாக இருந்தால் பாரபட்சம் இல்லாமல் அனைவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பிபின் ராவத் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, அதைக் கொண்டாடிப் பதிவிடுகிறார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா? இவர்கள் மீது டிஜிபி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.