பிபின் ராவத் மரணம் குறித்து கேள்வி எழுப்பிய சுப்பிரமணியன் சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்று மாரிதாஸ் வழக்கில் மதுரை ஹைகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ்Maridhas Answers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். பாஜகவிற்கு ஆதரவாகவும், திமுக கட்சிக்கு எதிராகவும் இவர் வீடியோ வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் இரண்டு புகார்களின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு அரசு தவறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தற்காக மதுரை நகரக் காவல்துறை மாரிதாஸை கைது செய்தது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்த பதிவு ஒன்றுதான் இதற்கு காரணம். பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை காவல்துறையில் அளித்த புகாரின் பெயரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அதேபோல் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு எதிராக இவர் சில மாதங்களுக்கு முன் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் அந்த சேனல் நிர்வாகியின் மெயில் என்று கூறி பொய்யான மெயில் ஒன்றை இவர் வெளியிட்டு இருந்தார். இந்த பொய்யான மெயில் குறித்து சேனல் நிர்வாகம் புகார் அளித்த நிலையில் மோசடி வழக்கில் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார். உத்தமபாளையம் சிறையில் இருந்தவர் மீண்டும் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்
இதையடுத்து தமிழ்நாடு அரசு வாதத்தில், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மாரிதாஸ் ட்வீட்டை பார்த்தால் என்ன நினைப்பார்கள்? மாரிதாஸ் தமிழ்நாட்டின் நேர்மைத் தன்மை குறித்தே கேள்வி எழுப்பியிருக்கிறார். மனுதாரர் ஒரு கட்சியைச் சேர்ந்தவர். அவர் தமிழ்நாடு அரசிற்கு எதிராக, அரசியல் சூழ்ச்சியோடு இந்த ட்வீட்டை செய்துள்ளார். பேச்சு சுதந்திரம் எனும் பெயரில் அவர் இத்தகைய கருத்துக்களை தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.
இதற்கு, கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில்தான் கருத்து தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டதால், கருத்து சுதந்திர சிறகுகள் காயப்பட்டுள்ளன என்று மாரிதாஸ் தரப்பு வாதம் வைத்தது.
இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி, 124(A)- அரசுக்கு எதிராக, அமைதியை குலைக்கும் வகையில் பேசுவது. சட்ட, ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் பேசுவது . 153 (A)- சாதி, மதம், குழுக்களுக்கிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாக நடப்பது ஆகிய பிரிவுகளில் மாரிதாஸ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த ட்வீட்டில் அது போல எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.முப்படைகளின் தலைமை தளபதியின் மரணம் தொடர்பாக உரிய விசாரணையை நடத்தி வரும் சூழலில், அது குறித்து வதந்தியை பரப்பியுள்ளார்.ஆட்சியிலியிருக்கும் அரசுக்கு எதிராக மக்களை திருப்பும் நோக்கில் இது போல ட்வீட் செய்துள்ளார். அதனடிப்படையிலேயே வழக்கு பதியப்பட்டு மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். என்று தமிழ்நாடு அரசு வாதம் வைத்தது. இதையடுத்து இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை நாளை நடக்கும் என்று கூறி மனுவை நீதிபதி நாளைக்கு ஒத்திவைத்தார்