மயிலாடுதுறை அருகே அம்பேத்கரின் படத்துக்கு மாலை அணிவிப்பதில் இரு பிரிவினரிடையே மோதல் எற்பட்டு பதற்றம் உருவாகியுள்ளது. மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தி பேருந்து நிறுத்த பகுதியில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு ஒரு பிரிவினர் அலங்கரிப்பு செய்து மலர் மாலை வைத்திருந்தனர்.அப்பகுதியில் அம்பேத்கர் படம் வைப்பதால் ஜாதி மோதல் உருவாகும் என்று மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த மணல்மேடு காவல்துறையினர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினார். அப்போது இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கட்டைகளால் வீசி தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காணப்பட்டது.தொடர்ந்து காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பட்டவர்த்தி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பிலும் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங், மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ஆகியோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் இன்றி அனைவருக்கும் சமத்துவம், சமூக நீதி கிடைக்க வேண்டும் என்று தான் அண்ணல் அம்பேத்கர் போராடினார். ஆனால் அவரது படத்துக்கு மாலை அணிவிப்பதிலேயே பிரச்சினை ஏற்பட்டது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.