பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ச்சியாக மர்மக் குழுக்களால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். லஷ்கர் இ தொய்பா, ஜெயிஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற அமைப்புகளின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் அண்மையில் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்கள் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத்தின் முக்கிய உதவியாளர் ஜியா உர் ரகுமான் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்குமுன், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலும் தீவிரவாத அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் குறிவைக்கப்பட்டனர்.
அதேபோல், பலுசிஸ்தான் மாநில தலைநகர் குவெட்டா விமான நிலையம் அருகே, ஜமாத் உலமா இ இஸ்லாம் (ஜேயுஐ) அமைப்பின் மூத்த தலைவர் முப்தி அப்துல் பாகி நுார்சாய் மீது மர்மநபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால், பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ மிகுந்த பதற்றத்தில் உள்ளது. ஹபீஸ் சயீத் மற்றும் அவரது மகன் தல்ஹாவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத தலைவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களின் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்ற கேள்வி இன்னும் பதிலளிக்கப்படவில்லை. ஆனால், பாகிஸ்தானுக்குள் தீவிரவாத அமைப்புகளை குறிவைத்து நடக்கும் இந்தத் தாக்குதல்கள், அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைமையை கேள்விக்குறியாக்கியுள்ளன.