திருச்சியில் மாவட்ட அமைச்சருக்கு பயந்து அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற தயங்கும் கோட்டாட்சியர் அருள்….
திருச்சி பீமநகர் பழைய தபால் நிலைய சாலையில் உள்ள பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் என்ற போலி டி.வி. விற்பனை செய்யும் கடையானது அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக வருவாய்த்துறையினருக்கு புகார் சென்றது.
மேற்படி இடத்தை வருவாய் கோட்டாட்சியர் அருள் தலைமையில் திருச்சி மேற்கு வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கோ அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொன்மலைக் கோட்ட டவுன் சர்வேயர் ஆகியோருடன் கூட்டாக சேர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்த போது, மேற்படி இடமானது வார்டு- X, பிளாக்-9, டவுன் சர்வே நம்பர் 98 மற்றும் 99 -ல் உள்ள சர்க்கார் புறம்போக்கு நிலம் என உறுதி செய்த நிலையில் அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக அரசாணை 540-ல் குறிப்பிட்டுள்ளவாறு அறிவிப்பு கடிதம் கொடுக்காமல், அதற்கு மாறாக அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா வழங்க கோட்டாட்சியர் அருள் முயற்சி செய்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக விசாரித்த போது, பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மாவட்ட அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது என்றும் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட கடை அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்பதை தெரிந்தும் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் அமைச்சரின் கடும் கோபத்திற்கு ஆளாகி பந்தாடப்பட கூடும் என்ற அச்சத்தில் கோட்டாட்சியர் அருள் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தயக்கம் காட்டி வருவதாக தெரிவிக்கின்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் அதிரடியாக நடவடிக்கை எடுத்து பல கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.