மூதாட்டியை ஓராண்டாக அலைக்கழிக்க வைக்கும் டவுன் சர்வேயர் லெனின் அரசு மீது அதிரடி நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி..!!
பட்டா பெயர் மாற்றம் தொடர்பான முறைகேடுகளை தடுக்கவும், இடைத்தரகர்கள் தலையீடு முற்றிலும் ஒடுக்கவும், லஞ்ச பணப் புழக்கம் நிறுத்தவும் பட்டா பெயர் மாற்றம் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண, “FIRST IN- FIRST OUT” எனும் முதலில் வருவோருக்கு முதலில் சேவை என்ற திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தால், முழு நிலத்திற்கான பட்டா பெயர் மாற்றம் செய்ய நில அளவை நகர சார் ஆய்வாளர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோரின் ஒப்புதலுடன் 15 நாட்களுக்குள் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் .
அதேபோல் உட்பிரிவு பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக நகர சார் ஆய்வாளர், வட்ட துணை ஆய்வாளர், முதுநிலை வரைவாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் ஒப்புதலுடன் *30 நாட்களுக்குள்* தனிப் பட்டா வழங்கப்பட வேண்டும்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் டவுன் சர்வேயர்களுக்கான வேலைப்பளு மற்றும் நில அளவை துறை பணியாளர்கள் பற்றாக்குறையால் குறுகிய காலத்தில் பட்டா வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்படுவதாக நில அளவை துறை இயக்குனரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 30-ல் நாட்களில் இருந்து 45 நாட்களுக்குள் கண்டிப்பாக பட்டா பெயர் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென என ஆணையிடப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு வட்டத்திற்கு உட்பட்ட செங்குளம் கிராமம், பாலக்கரை பகுதி, மஞ்சனக்காரத் தெருவை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு சொந்தமான வெறும் 284 சதுரடி கொண்ட இடத்திற்கு அசல் கிரைய ஆவணம் மற்றும் மூல ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்து பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மனு செய்து டவுன் சர்வேயர் *லெனின் அரசு* சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்து பட்டா வழங்க வேண்டும் என்றால் தாசில்தாருக்கு பார்மாலிட்டிஸ் கொடுக்க வேண்டுமென கூறியுள்ளார், கொடுக்க மறுத்த மூதாட்டி மனுவை *(2023/0153/15/010792)* தள்ளுபடி செய்துள்ளார்.
அதன்பின் மீண்டும் கடந்த மே மாதம் பதிவு செய்த பட்டா பெயர் மாற்றம் மனுவிற்கு (2024/0153/15/007942) டவுன் சர்வேயர் லெனின் அரசு அவர்கள் பட்டா தொடர்பான ஆவணங்களை அனைத்தையும் இரண்டாவது முறையாக பெற்று இதுவரை பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.
ஒரு பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக இரண்டு முறை ஆவணங்களை வாங்கிக் கொண்ட டவுன் சர்வேயர் லெனின் கொடுக்க வேண்டியதை கொடுக்காததால் ஓராண்டிற்கும் மேலாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யாமல் மூதாட்டியை இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.