திருச்சியில் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி கே கே நகர் உடையான்பட்டி, கவிபாரதி நகரைச் சேர்ந்தவர் ஆர். ஸ்டாலின் (33). தொழிலாளியான இவர் கடந்த 2022 ஆவது ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி முற்பகலில், திருச்சி நீதிமன்றம் எதிரேயுள்ள வஉசி சிலை அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த எஸ். பாரதிதாசன் (28) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி, ஸ்டாலின் பையிலிருந்த ரொக்கத்தை பறித்துச்சென்றார். இது குறித்து திருச்சி நீதிமன்ற காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து பாரதிதாசனை கைதுசெய்தனர்.
மேலும் வழக்குத் தொடரப்பட்டு திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், கத்தியைக் காட்டி மரண பயத்தை ஏற்படுத்தி பணம் பறித்த குற்றத்துக்காக பாரதிதாசனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதமும் விதித்து நீதிபதி, மீனாசந்திரா தீர்ப்பளித்தார்.