பாசன வாய்க்காலில் மாநகராட்சி கழிவுநீர் நீரூற்று நிலையத்திலிருந்து மலக்கழிவுகளை வெளியேற்றும் மாநகராட்சி நிர்வாகம்.
வேடிக்கை பார்க்கும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள்…
திருச்சி ஸ்ரீரங்கம் வெள்ளித்திருமுத்தம் கிராமத்திற்கு உட்பட்ட அம்மா மண்டபம் சாலையில் உள்ள நாட்டு வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் ஒன்று பிரிந்து திருவானைக்காவல், கொண்டையம்பேட்டை அக்ரஹாரம் பின்புறம் சென்று, இரணியம்மன் கோவில் குளத்தின் அருகே சென்று திருச்சி சென்னை பைபாஸ் சாலையை கடந்து தாகூர் தெரு வழியே சென்று பின்பு கொள்ளிடம் ஆற்றில் இணையும்.
இந்தக் கிளை வாய்க்காலின் தண்ணீரை கொண்டு திருவானைக்கோவில் மற்றும் கொண்டையம்பேட்டை பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பலரும் விவசாயம் செய்து வருகின்ற நிலையில் திருவானைக்கோவில் கன்னிமார் தோப்பு பகுதியில் மேற்கண்ட கிளை பாசன வாய்க்காலினை ஒட்டியே திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட கழிவு நீர் நீரூற்று நிலையம் அமைந்துள்ளது.
இந்தக் கழிவுநீர் நீரூற்று நிலையத்திலிருந்து தினமும் மலம் கழிவுகளை பாசன வாய்க்காலில் வெளியேற்றி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாசன வாய்க்காலில் மலக்கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி வசிக்கும் பொது மக்களும் மற்றும் திருவானைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் மூக்கைப்பிடித்தபடி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது.
பொது மக்களுக்கும் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பாசன வாய்க்காலில் கழிவுநீரை வெளியேற்றிய மாநகராட்சி ஊழியர் மீது நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.