திருச்சியில் தனியார் நகர பேருந்துகளின் அடாவடித்தனத்தை கண்டுகொள்ளாத காவல் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மற்ற மாநகரப் பகுதிகளுக்கு செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நகர பேருந்துகளில் மட்டுமின்றி அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் கூட வழக்கத்திற்கு மாறாக 80 டெசிபல் மேல் அதிக ஒலி எழுப்பும் ஏர்-ஹாரன்களைப் பயன்படுத்தி வருவது பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்
திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய, போக்குவரத்துக் காவல் துறையினர் தினமும் சத்திரம் பேருந்து நிலையத்தில் பணி செய்து வந்தாலும் பெரும்பாலான நேரங்களில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் பொது மக்களிடம் அபராதம் வசூல் செய்வதை மட்டுமே தலையாய கடமையாக செய்து கொண்டு வருகின்றனர்.
ஆனால் தங்கள் கண் முன்பாக தனியார் நகர பேருந்து ஓட்டுநர்கள் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன்களை தொடர்ந்து எழுப்பியவாறு செய்யும் அடாவடித்தனத்தை மட்டும் கண்டும் காணாமல் இருந்து வருவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் மற்றும் காவல்துறைக்கும் ஆதாரம் ஆவணங்களுடன் புகார்கள் பலமுறை கொடுத்தாலும் *மோட்டார் வாகன சட்டம் பிரிவு 190 (2) கீழ் ஏர் ஹாரனை அப்புறப்படுத்தியும் மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்ற விதி* இருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.