திருச்சியில் பேருந்து, ரயில் நிலையங்களில் அதிகரித்த பயணிகள் கூட்டம்
திருச்சி, ஏப். 21: மக்களவைத் தேர்தலையொட்டி வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்ற பொது மக்கள், பணியாற்றும் ஊர்களுக்கு திரும்பியதால் திருச்சியில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகளின் ஞாயிற்றுக் கிழமை கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி வெளியூர்களில் வேலை மற்றும் கல்வி உள்ளிட்டவைகளுக்காக தங்கியிருப்போர், சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டியிருந்தது. அவ்வாறு வெளியூர்களில் தங்கி இருந்தவர் பேருந்து மற்றும் ரயில்களின் மூலம் வியாழக்கிழமை சொந்த ஊருக்கு சென்றனர். பயணிகள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில், ஏப்ரல் 17, 18, 20, 21 ஆம் தேதிகளில் சுமார் 2,200 க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கியது. அந்த வகையில், சொந்த ஊர் சென்று வாக்களித்துவிட்டு தொடர்ந்து இரு நாள் விடுமுறைக்கு பின் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏராளமானோர் வெளியூர் புறப்பட்டனர். இதனையொட்டி திருச்சி மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்கள், ஜங்ஷன் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி நள்ளிரவு வரை பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.