திருச்சி ரெயில் நிலையத்தில் மருந்தகம் மற்றும் பல்வேறு திட்டப் பணிகள்- பிரதமர் மோடி காணொலி மூலம் நாளை தொடங்கி வைக்கிறார்.
திருச்சி மார்ச் 11 :
திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ரெயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்ட பணிகளை நாளை12 ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார். அதேபோல, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ. 85 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்ட பணிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ள பிரதமர் மோடி, 44 ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 60 “ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு”ஸ்டால்களையும் காணொளி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் தயாரிப்பு பொருட்கள் சந்தைப்படுத்தப்படும் . மேலும், திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட திருத்துறைப்பூண்டி மற்றும் பட்டுக்கோட்டையில் தலா ரூ.7 கோடி மற்றும் 6.8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குட்செட் யார்டுகளையும், திருச்சி ரெயில்வே சந்திப்பில் ஜன் ஆசதி திட்டத்தின் கீழ் மருந்தகம் ஒன்றையும் தொடங்கி வைக்கிறார். மேலும், புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயிலையும் தொடங்கி வைக்க உள்ளார்,இவ்வாறுஅன்பழகன் தெரிவித்தார்.