திருச்சி ஈவெரா கல்லூரி அருகே விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
திருச்சி, மார்ச் 6 :
திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி அருகே போக்குவரத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டமைக்கு மாணவர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், பெரியார் ஈவெரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரிக்கையை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். இது தொடர்பாக காவல்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து, மாநகர காவல்துறை, கன்டோன்மென்ட் உதவி ஆணையர் மற்றும் அரியமங்கலம் போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர், உதவி ஆய்வாளர் அடங்கிய போலீசார் அப்பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சாலைகளில் இரும்புகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்துகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம், காவல்துறையினருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.