திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் பொதுக்களுக்கு செய்ய வேண்டிய சட்டப்படியான பணியை செய்யாமல் கையூட்டு பெறுபவர்களை அடையாளம் கண்டு, சம்மந்தப்பட்ட ஊழியர்களின்மீது முறையான சட்ட நடவடிக்கைகள் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, தினசரி பத்திரிக்கைகள், வார பத்திரிக்கைகள் மற்றும் மாதப்பத்திரிக்கைகளில் பணிபுரியும் நிருபர்கள் என்று சொல்லிக்கொண்டு போலியான சில நிருபர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு சென்று, குறிப்பாக சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலகங்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்கள் ஆகிய அலுவலகங்களுக்குச் சென்று அங்குள்ள அரசு அலுவலர்களிடம், உங்களைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பொய்யான தகவலை அளிப்பேன் என மிரட்டி பணம் பறித்து வருகிறார்கள் என்ற தகவல் எங்களது துறையின் கவனத்திற்கு தெரிய வருகிறது.
அதேபோல் மேலும் சில மோசடி நபர்கள், திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களின் கைபேசிகளுக்கு பொது தொலைபேசிகளில் இருந்து அழைத்து, தங்களை விஜிலன்ஸ் அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு மிரட்டி பணம் பறித்து வருகிறார்கள் என்ற தகவலும் எங்களது துறையின் கவனத்திற்கு தெரிய வருகிறது.
எனவே, திருச்சி மாவட்டத்தில் பணிபுரியக்கூடிய அரசு ஊழியர்கள் எவருக்கேனும் மேற்படியான நிகழ்வுகள் ஏதேனும் ஏற்படும் சூழ்நிலையில் சம்மந்தப்பட்ட அரசு ஊழியர்கள், போலி நிருபர்கள் பற்றிய தகவலை உடனடியாக சம்மந்தப்பட்ட உள்ளூர் காவல்துறையினருக்கு புகார் அளிக்குமாறும், விஜிலன்ஸ் அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் போலியான நபர்கள் பற்றிய விபரங்களை திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் தெரிவிக்க வேண்டுமாறும் விழிப்புணர்வு செய்து கேட்டுக் கொள்ளப்படுகிறது. இச்செய்தியினை திருச்சி மாவட்டத்தில் அரசுதுறைகளில் பணிபுரியும் உயர் அலுவலர்கள், தங்கள் கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கும் தெரியப்படுத்தி எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையின் அலுவலக தொலைபேசி எண்.0431-2420166,
டி.எஸ்.பி கைபேசி எண்.94981-57799 காவல் ஆய்வாளர்களின் கைபேசி எண்கள்-
94432-10531, 94981-05856, 94981-56644, 89036-35766
தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.