திருச்சி, பிப். 16:
மாணவ, மாணவியர் மனிதநேயத்துடன் கூடிய சமத்துவமிக்க சிறந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்,தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். ஆறுமுகம்.
திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கி அவர் மேலும் பேசியது :
இங்கே பட்டம் பெறும் இளையோர் நிலைத்த தன்மையுடன் சமுதாயத்தில் பொறுப்பு மிக்கவர்களாகவும், நேர்மை, கருணை ஆகிய விழுமியங்களைக் கடைப்பிடிப்பவர்களாகவும் திகழ வேண்டும். மாணவ, மாணவியர் மனிதநேயத்துடன் கூடிய சமத்துவமிக்க சிறந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும். நல்ல சமுதாயம் படைக்க சிறந்த நுண்ணறிவும் சமூக ஈடுபாடுடைய இளையோரும் அவசியம் என்றார்.
கல்லூரியில் அனைத்துத் துறைகளிலிருந்தும் இளநிலையில் 1660, முதுநிலையில் 362, ஆய்வியல் நிறைஞராக 10 என மொத்தம் 2032 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இளநிலையில் 18 மாணவியர், முதுநிலையில் 16 பேர் பல்கலைக்கழகத் தரவரிசையில் இடம் பெற்றனர். கல்லூரி முதல்வர் இசபெல்லா ராஜகுமாரி வரவேற்றார். கல்லூரி செயலர் ஆனிசேவியர் முன்னிலை வகித்தார்.