திருச்சி, பிப். 16 :
திருச்சி கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் மார்ச்சுக்குள் முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்துக்கு உள்பட்ட மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் (எம்பிக்கள்) பங்கேற்ற ரயில்வே அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளாரக பங்கேற்று அவர் மேலும் பேசியது :
திருச்சி கோட்டத்தில் தஞ்சாவூர்,மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், லால்குடி, சிதம்பரம், காரைக்கால், ஸ்ரீரங்கம்,மன்னார்குடி, போளூர், திருப்பாதிரிப்புலியூர், திருவண்ணாமலை, திருவாரூர்,, வேலூர், விருத்தாசலம், உள்ளிட்ட 15 ரயில் நிலையங்களில் அமிர்த பாரத் திட்டத்தின்கீழ் மேம்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மார்ச் இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதுச்சேரி மற்றும் கும்பகோணம் பகுதிகளில் ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். தொடர்ந்து கோட்டத்தில் மேற்கொண்டுள்ள உள் கட்டமைப்பு பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்தும் பொதுமேலாளர் விளக்கினார்.
கூட்டத்தில் பங்கேற்ற எம்பிக்கள், ரயில் சேவைகள் தொடர்பாக,புதிய ரயில்கள் அறிமுகம், ஏற்கனவே உள்ள ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள், புதிய ரயில் பாதை அமைத்தல், பாதைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம், தற்போதுள்ள ரயில் சேவைகளின் விரிவாக்கம், நிலைய மேம்பாட்டு பணிகள், மற்றும் மின்மயமாக்கல் பணிகள், மேம்பாலங்கள் அமைத்தல், பாலங்களின் கீழ் சுரங்கப்பாதைகள் அமைத்தல் மற்றும் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட பயணிகளுக்கான வசதிகளை வழங்குதல், ரயில்வே திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல், ரயில்வே திட்டங்களை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கியும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் விளக்கிப் பேசினர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எம்.எஸ். அன்பழகன் தலைமை வகித்தார். கோட்ட வணிக முதுநிலை மேலாளர் செந்தில்குமார், மற்றும் பல்வேறு பிரிவு ரயில்வேதுறை அலுவலர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சு.திருநாவுக்கரசர் (திருச்சி),கார்த்திக் சிதம்பரம் (சிவகங்கை), தொல்.திருமாவளவன் (சிதம்பரம்), வி. வைத்திலிங்கம் (புதுச்சேரி), எம்.செல்வராஜ் (நாகப்பட்டிணம்), டி. ரவிக்குமார் (விழுப்புரம்), எஸ். கல்யாணசுந்தரம் (மாநிலங்களவை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.