திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு நகர பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான் (AIR HORN) பொருத்தப்பட்டுள்ளன. இது போக்குவரத்து விதிமீறலுக்கு உள்பட்டதாகும். இந்த வகை அதிக ஒலி எழுப்பக் கூடிய பேருந்துகள் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் செல்லும் பகுதிகளில் அதிக ஒலியை தொடர்ந்து எழுப்பி பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.இதனால் ஏற்படும் அதிக இரைச்சல் காரணமாக பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஒரு சில சமயங்களில் திடீரென எழுப்பப்படும் இது போன்ற அதிக ஒலியினால் சாலையில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர்.இது தொடர்பாக மாநகர காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையினருக்கு பொது மக்களிடமிருந்து தொடர்ந்து புகார் மனுக்கள் சென்றாலும்,அடாவடி செய்யும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.