திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் ரயில்வேக்கு சொந்தமான முட்புதர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து இன்று அதிகாலை போலீஸ் கமிஷனர் காமினி ஆலோசனையின் படி உதவி போலீஸ் கமிஷனர் காமராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடம் வரைந்தனர். பின்னர் முட்புதர் பகுதியில் சல்லடை போட்டு தேடினர். அப்போது அங்கு மண்ணுக்கடியில் 3 நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இது மிகவும் சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டு என கூறப்படுகிறது. பிரபல ரவுடி ஒருவர் வெளிமாந்தளத்தில் இருந்து வாங்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அந்தப் பகுதியில் இரு ரவுடிகளுக்கிடையே கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. இதில் ஒரு ரவுடி அவரது எதிரியை தீர்த்த கட்ட நாட்டு வெடிகுண்டு வாங்கி மறைத்து வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் ஒரு சில ரவுடிகளை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.