திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் மேல குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆ.சரவணன்(48). வர்ணம் பூசும் (பெயிண்டர்) தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சவுந்திரவள்ளி (45), எழில் நகர் பகுதியில் உள்ள பந்தல் ஒப்பந்ததாரரிடம் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு மூன்று மகள்கள் இரண்டு மகள்கள் சென்னையில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். மூன்றாவது மகள் திருச்சி திருவெறும்பூர் தொழிற் பயிற்சி கூடத்தில் படித்து வருகிறார்.
இந்நிலையில், சவுந்திரவள்ளி தனது மூன்றாவது மகளுடன் சென்னையில் உள்ள இரு மகள்களை பார்த்து வரும் வகையில் கடந்த வாரம் சென்னை சென்றார். சரவணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை அவர் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சவுந்தரவள்ளிக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அவரது நண்பர் பால்ராஜ் என்பவர் கொலையை உறுதி செய்து, திருவெறும்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சமுத்திரவள்ளிக்கும் பந்தல் ஒப்பந்த நிறுவன மேலாளராக பணியாற்றிய லால்குடி பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. வியாழக்கிழமை இரவு சரவணன் வீட்டுக்கு மதுவுடன் சென்றுள்ளார் ராதாகிருஷ்ணன். பின்னர் இருவரும் அருந்தியுள்ளனர். போதை ஏறியதும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ராதாகிருஷ்ணன் சரவணனை அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
பின்னர் அவரே சௌந்தரவல்லிக்கு கைப்பேசி மூலம் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
போலீஸார் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட நிலையில், ராதாகிருஷ்ணன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
முழு விசாரணைக்கு பின்னரே இந்த கொலையின் பின்னணி, தொடர்புடையவர்கள் குறித்த விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.