திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகேயுள்ள தாயனூர் கிராமப் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் ஆற்று வாய்க்கால் கரை உள்ளிட்டவைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற அரசு அதிகாரிகளுடன் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்குவாதம் செய்து பணிகளை செய்ய விடாமல் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி – திண்டுக்கல் சாலையில் புங்கனூர் ஏரியை ஒட்டி மலைப்பட்டி கிராம மக்களுக்கு சொந்தமான 60 ஏக்கர் விவசாய நிலத்தை ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் வாங்கி, குடியிருப்பு மனகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இத்துடன் தாயனூர் வருவாய் கிராமத்திற்கு கட்டுப்பட்ட புறம்போக்கு நிலம், அரசுக்கு சொந்தமான நிலம், பொதுப்பணித்துறை வாய்க்கால்கள், வண்டிப்பாதைகள் என 2 ஏக்கர் நிலத்தை ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் ஆக்கிரமித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அதிமுகவை சேர்ந்த மணிகண்டம் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக், தமிழக முதல்வர் மூ.க. ஸ்டாலின் உட்பட 14 அதிகாரிகளுக்கு புகார் மனுக்களை அனுப்பியுள்ளார்.
அந்த மனுக்களில், சுமார் 300 அடி ஆழமுள்ள குவாரி பள்ளத்திற்கு அருகே அந்த குடியிருப்புகளின் சுற்றுச் சுவர் அமைந்துள்ளனர். எதிர்காலத்தில் இயற்கையின் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு சுற்றுச்சுவர் இடிந்து குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்படும் அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளின் கழிவு நீர் வடிகாலானது பாசன வாய்க்காலோடு இணைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை வாய்க்கால், வண்டிப் பாதை உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு, அங்கு அமைக்கப்பட்டு வரும் குடியிருப்பு மனை பிரிவுகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்து பொது மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். பொது இடங்கள் மற்றும் புறம்போக்கு இடத்தை மீட்டு புங்கனூர் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து 365 ஏக்கர் பரப்பளவு உள்ள புங்கனூர் குளம் மற்றும் கள்ளிக்குடி, கொத்தமங்கலம், பிராட்டியூர் குளத்துக்கு செல்லும் 2 ஆம் எண் பிரதான வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டியிருந்த தடுப்பு சுவரை அகற்ற, ஜேசிபி இயந்திரத்துடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ராஜரத்தினம், புகழேந்திரன் உள்ளிட்டோர் திங்கள்கிழமை சென்றுள்ளனர். இதையறிந்த ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். தகவலறிந்த ராம்ஜிநகர் காவல் உதவி ஆய்வாளர் வினோத்குமார் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஆக்கரமிப்பை அகற்றிக்கொள்ள ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் 3 நாள் கால அவகாசம் கேட்டுள்ளனர். அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான பிரச்னை தாற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.