திருச்சி லால்குடி காவல் நிலையம் முன்பு தீக்குளித்த சிறை காவலர் ராஜா திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
இதற்கிடையே, லால்குடி உதவி ஆய்வாளர் பொற்செழியனை பணியிடை நீக்கம் செய்து, திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம்பரை ஊராட்சியில் வசிப்பவர் மணி இவரது மகன்கள் நிர்மல், ராஜா இருவரும் அண்ணன் தம்பி ஆவர். ராஜா லால்குடி கிளை சிறையில் காவலராக பணியாற்றி வந்துள்ளார்.
இவரது தம்பி நிர்மலுக்கும் ராஜாவுக்கும் சொத்து பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த சொத்து பிரச்சனை தொடர்பாக அண்மையில் இருவருக்குள்ளும் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மீண்டும் ராஜாவுக்கும், நிர்மலுக்கும் இடையே தகராறு ஏற்படவே ராஜா லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
லால்குடி போலீசார் ராஜாவின் புகாரை ஏற்க மறுத்ததால் விரக்தி அடைந்த சிறை காவலர் ராஜா காவல் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு தனக்குத்தானே உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் ராஜா 84 சதவீதம் தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்த ராஜாவை லால்குடி போலீசார் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
நேற்று திருச்சி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராஜா சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.
இதனைத் தொடர்ந்து லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொற்சொழியன் முறையாக விசாரணை செய்யவில்லை என்று நேற்று தீக்குளித்த ராஜா புகார் தெரிவித்திருந்த நிலையில், இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது.
இதனை அடுத்து திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர், எஸ்.ஐ பொற்செழியனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
லால்குடி காவல் நிலையம் முன்பு சிறைக்காவலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க.சண்முகவடிவேல்
Prev Post
Next Post