திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை சமாளிக்கும் விதமாக மாநகர காவல்துறை சார்பில் பேரிடர் மேலாண்மை மீட்டுகுழுவினர் உபரகணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மற்றும் கொள்ளிடத்தில் சுமார் 1.25 லட்ச கன அடிக்கும் மேலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கடுமமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் செல்கின்றது. சில இடங்களில், கரைகளை தாண்டி தண்ணீர் எந்த நேரத்திலும் வழியும் நிலையும் உள்ளது. ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் காவிரிக்கரை பழுதான பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. என்றாலும் அந்த இடத்தில் உடைப்பு ஏற்பட்டால் சமாளிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை, பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரையோர மற்றும் தாழ்வான தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்கவும், குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால், பொதுமக்களை வெள்ளப் பகுதியிலிருந்து உடனடியாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கென ஒரு காவல் ஆய்வாளர், 4 காவல் உதவிஆய்வாளர்கள் மற்றும் 80 காவலர்கள் கொண்ட திருச்சி மாநகர காவல் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் தக்க பாதுகாப்பு உபகரணங்களுடன் ஸ்ரீரங்கம் மற்றும் கோட்டை பகுதியில் தயார் நிலையில் உள்ளனர். மீட்புக்குழுவினரை காவிரிக்கரையில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகர காவல் ஆணையர் ஜி. கார்த்திகேயன், பேரிடர் மீட்பு பணியில் மிகவும் கவனத்துடன் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது, துணை மற்றும் உதவி ஆணையர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.