Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

ஆதீனம் அவர்களின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்தக்கூடாது…..

0

பல்லக்கை |Palantquine] சுமந்து செல்வது அடிமைத்தனம் என்று கூறிவரும் தி.க வினர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் காலங்காலமாக நடக்கும் மதிப்புமிகு தருமபுர ஆதீனம் அவர்களின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி வருவாய் கோட்டாட்சியர் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 23-ன் கீழ் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 என்னவென்றால்,

“Traffic in human beings and beggar and other similar forms of forced labour are prohibited and any contravention of this provision shall be an offence punishable in accordance with law”.

என மேற்படி சட்டப் பிரிவை படிக்கும் போது, ‘மனிதர்களை கடத்துவதும், கொத்தடிமை மனிதர்களை பணியில் வைத்தலும் குற்றம் கூறுகிறது. மேற்படி பட்டினப் பிரவேசத்தில் கொத்தடிமைகள் ஈடுபடுகிறார்களா? Forced labour மூலம் ஆதீனகர்த்தரை தூக்கி சென்றால் அது குற்றமாக கொள்ளலாம். சீடர்கள், தம்பிரான்கள், ஆதீன கர்த்தர் அவர்களை ஆசானாக ஏற்றுக்கொண்ட மெய்யன்பர்கள் தாமாக முன்வந்து பல்லக்கில் பிரவேசிக்க வைப்பது கொத்தடிமைகள் என்ற பொருளில் வருமா??

International Labour Organization (ILO) பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின், 1930 ஆண்டின் கட்டாய தொழிலாளர் மாநாட்டின் படி, Forced Labour என்பதை கீழ்கண்டவாறு வரையறை செய்யப்பட்டுள்ளது.

“All work or service which is exacted from any person under the threat of a penalty and for which the person has not offered himself or herself voluntarily.”

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 இல், other similar forms of forced labour என்றே உள்ளது. இந்த வைபவத்தில் forced labour எவரும் இல்லை. இருப்பினும் அதே அரசியலமைப்பு சட்டம் பிரிவு 26(b)-ன் படி to manage Its own affairs in matters of religion; எனும் வகையில் மத சம்மந்தமான தனது தனிப்பட்ட விவகாரங்களை கவனித்து கொள்ள உரிமை அளிப்பட்டுள்ளதால், சைவ சமயத்தை சார்ந்த மட நிகழ்வில் கோட்டாட்சியர் தலையிட எவ்வித அதிகாரமுமில்லை.

ஒருவேளை இந்து மதத்தை வெளிப்படையாக வெறுக்கும் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தாலும், பிரச்சனை செய்ய முன் வந்தாலும் அவர்கள் மீது தான் கோட்டாட்சியர் CRPC படி நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர பல நூற்றாண்டுகளாக நடைபெறும் ஒரு வழக்கத்தை தடை செய்ய வருவாய் துறைக்கோ, காவல் துறைக்கோ எவ்வித அதிகாரமுமில்லை.

தருமை ஆதீனத்தின் மீது இன்றல்ல, கால காலமாக தமிழ் வழி கும்பாபிஷேகம்,பிரிவினைவாத முற்போக்கு,இடது மற்றும் NGOக்கள் என பல சக்திகள் வெறுப்பிலேயே உள்ளார்கள்..

இதற்கு காரணம் என்ன? ஆகம புறம்பானவைகளையோ,வேத எதிர்ப்பையோ,பிராமண வெறுப்பையோ,வடமொழி வெறுப்பையோ தருமை ஆதீனம் என்றும் செய்ததில்லை..சம்ஸ்கிருதமும் – தமிழும் சைவத்தின் இரு கண்கள் என்று போற்றினார்கள்..

இன்று வரை தமிழ் வழி கும்பாபிஷேகம்,ஆகம விரோத அர்ச்சக நியமனங்கள் அனைத்தையும் எதிர்ப்பது அல்லது அதை ஏற்காத நிலைப்பாடுடைய பாராம்பரிய சைவமடம் தருமை ஆதீனமாகும்.எனவே,சமயத்தை அரசியலாக ஆக்கிய தரப்புகளுக்கு, இந்த மடத்தின் மீதான வன்மம் பெருகிக் கொண்டேததான் போகும்..

அதுவும்,தற்போது 27 வது சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பதவியேற்ற பிறகு சோழமண்டலத்தில் வீழ்ந்து கிடந்த புகழ்பெற்ற கோவில்களுக்கு வேகமாக கும்பாபிஷேகம் செய்து வருகிறார்கள்..

திருமுல்லைவாயில் கும்பாபிஷேகத்தில் ஆதீனத்தை தங்கள் குருவாக ஏற்று மீனவ சமூகமான சிவன்படவர்கள் கோயில் பணி செய்தார்கள்.அதிபத்த நாயனார் வம்சாவழி நீங்கள் என்றெல்லாம் போதித்து,அவர்களை உழவார பணிகளில் ஈடுபடுத்தினார் சன்னிதானம்.யாகசாலை அமைக்கப்பட்டதில் இருந்து மீன்பிடிக்க போகாமல்,அசைவத்தை புறக்கணித்து பக்தியோடு வழிபட்டார்கள்..

இப்படி பொதுவெளியில் இறங்கி, ஹிந்து சமூகத்தை தன் தவவலிமையால் உள்ளிழுக்கும் குருக்களை இங்கே செயல்படவிடாமல் தடுக்கும் மிகப்பெரிய லாபியே உள்ளது என்பதெல்லாம் மறுக்க முடியாத உண்மை..

அதோடு தென்னிந்தியா முழுக்க ஞானரத யாத்திரையை அறிவித்து போய்க் கொண்டே இருக்கிறார் சன்னிதானம்.இங்கிருக்கும் எல்லா கோவிலுக்கும் சென்று மக்களை சந்தித்து அருளாசி வழங்கியபடியே இருக்கிறார்.இத்தனையும் செய்வதை விட நூற்றாண்டு தர்மத்திலிருந்து விலகி இவர்களது அரசியலுக்கு அவர் வளைந்தும் கொடுக்கவில்லை..

இதெல்லாம் நிச்சயமாக தமிழக அரசியல் களத்துக்கு மட்டுமல்ல,பாழ்பட்ட ஆன்மீக களத்துக்கே உறுத்தலாகத்தான் இருக்கும்..ஆனாலும் எல்லா அரசியல்வாதிகளும் வருகிறார்கள்,எல்லா அதிகாரிகளும் வருகிறார்கள்.அதே போலத்தான் தமிழக ஆளுநரும் வருகை புரிந்தார்..

எனவே,எப்போது என பார்த்துக் கொண்டேயிருந்தவர்களுக்கு இதை அரசியல் பிரச்சனையாக மாற்றி தமிழக அரசின் ஈகோவைத் தூண்டி நூற்றாண்டுகளாக நடக்கும் பட்டினபிரவேசத்துக்கு தடைவாங்கியுள்ளார்கள்..

நான் ஆரம்பத்திலிருந்தே சொல்வது இதுதான்.தமிழ் வழி கும்பாபிஷேகம்,அனைத்து சாதி அர்ச்சகர்,பட்டனபிரவேச தடை..இது எல்லாமே ஒன்றொடு ஒன்று தொடர்பு கொண்டது.இது பக்தியை வளர்க்கும் என்று புரட்சி பேசுவதெல்லாம் அபத்தமானது.இது சமயத்தை வேரோடு சாய்க்கும்..இதை நாம் புரிந்துகொள்ளவில்லை என்றால் வீழ்வதை யாராலும் தடுக்க முடியாது..நிற்க.

மனிதனை மனிதன் தூக்குவது என்ற லாஜிக்கே இதில் கிடையாது.சைவ மரபில் குருவையே சிவமாக பார்க்கும் விசேஷ அருள்நிலையில் இருந்து நடக்கும் நிகழ்வு இது.ஆதீனங்களை வெறுமனே மனிதர் என்று மடத்து சிஷ்யர்களோ,மக்களோ பார்க்கவில்லை.

அவருக்குரிய குருமரபு திருக்கயிலாயப் பரம்பரை ஆகும்..சிவத்தையே குரு வழியில் பார்க்கும் மரபு இது..இதை நம்பாதவர்கள் அதை ஏற்க வேண்டியதில்லை,இவற்றைச் செய்ய வேண்டியதில்லை.ஆனால் நம்புகிறவர்கள் இந்த நிகழ்வை நடத்தும் போது,அதை எந்த அரசியல் சட்டத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது..

மடத்தை சுற்றிய நான்கு வீதிகளும் ஆதீனத்துக்கு சொந்தமானது.அங்கே ஆதீன சிஷ்யர்களும்,மக்களும் சேர்ந்து நடத்தும் விழாவை அதுவும் நூற்றாண்டு பாரம்பரியத்தை யாரால் தடுக்க முடியும்?

 

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்