தமிழகத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தடை விலக்கி கொள்ளப்படவில்லை. கர்நாடக அரசும் சீருடை முறையை கட்டாயமாக்க உத்தரவிட்டது.
இதற்கிடையே ஹிஜாப் தடையை நீக்க வேண்டும் எனக்கூறி உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் பெங்களூரில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜேஎம்காஜி அமர்வு வழக்கை பிப்ரவரி 10 முதல் விசாரிக்க துவங்கியது.
இந்நிலையில் வழக்கறிஞர் உமாபதி கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில், “எனக்கு வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்று வந்தது. அதில் தமிழ் மொழியில் பேசினார்கள். ஹிஜாப்புக்கு தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில்பேசியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இது மதுரை மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசுவது போல் உள்ளது. மேலும் ஜார்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி கொல்லப்பட்டதை அந்த நபர் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஒருமையில் பேசியதுடன், நீதிபதி வாக்கிங் செல்லும் இடம் தெரியும் என கூறுகிறார்” என தெரிவித்து இருந்தார்.இதுதொடர்பாக மற்றொரு வழக்கறிஞர் சுதா கத்வா பெங்களூரு கப்பன் பார்க் போலீசில் புகார் செய்தார். அங்கும் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதனால் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 3 நீதிபதிகளுக்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ”இந்த மிரட்டலை ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கான அடையாளமாக பார்க்கிறேன். தேசவிரோத செயல்களில் ஈடுபடம் நபர்களை வளர விடக்கூடாது. மதசார்ப்பற்றவர்கள் என அடையாளம் காட்டிக்கொள்ளும் நபர்கள் இந்த விஷயத்தில் மவுனமாக உள்ளனர். இது அவர்களின் போலி மதசார்ப்பற்ற தன்மையை காட்டும் வகையில் உள்ளது. இத்தகைய வகுப்புவாதம் சார்ந்த மிரட்டலுக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கிறது என்றால் அதற்கு நீதித்துறை தான் காரணம்” என்றார்.