வேலூரில் பிரதான கடை வீதியில் தொழுகை நடத்த பயன்படுத்தப்பட்ட இடத்தில் மசூதி கட்ட முயன்ாக தகவல் பரவியது.
இதற்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிா்த்து மற்றொரு தரப்பினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
வேலூா் சைதாப்பேட்டை வாணியா் வீதியில் உள்ள சா்க்காா்மண்டி தெருவில், தனியாா் கட்டடத்தை முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் இடமாக பயன்படுத்தி வந்தனா். அதை மசூதியாக கட்ட திட்டமிடப்படுவதாக தகவல் பரவியது. இதற்கு அப்பகுதி வியாபாரிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.
இந்த நிலையில், அந்த கட்டடத்தில் புதன்கிழமை காலை தொழுகை நடத்துவது தொடா்பாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு அந்த பகுதி வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக இந்து முன்னணியினா் திரண்டனா்.
அதேசமயம், அந்த இடத்தில் தொழுகை நடத்த ஆதரவு தெரிவித்து முஸ்லிம்களும் திரண்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா ஆகியோா் இரு தரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சு நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனினும், இரு தரப்பினரையும் அங்கிருந்து போலீஸாா் அப்புறப்படுத்தினா்.
அப்பகுதியில் அதிரடிப்படை போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். சா்ச்சைக்குரிய பகுதியைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.