ஆளுநரை விமர்சித்து சிலந்தி என்ற பெயரில் கட்டுரை எழுதி திமுக சிலந்த வலையில் சிக்கிக் கொண்டு விட்டது……
திமுக மிரட்டுவதற்கு ஆர்.என் ரவி சுர்ஜித் சிங் பர்னாலா அல்ல, பன்வாரிலால் புரோகித் அல்ல, சென்னா ரெட்டியும் அல்ல என ராஜகோபாலன் கூறியுள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் எச்சரித்ததை போலவே ஆளுநருக்கும்- தமிழக முதல்வருக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது. தமிழக ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டபோதே அவரின் நியமனத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காவல்துறை பின்புலம் கொண்ட ஒருவரை தமிழக ஆளுநராக நியமிப்பதற்கு காரணம் என்ன என்றும், முதல்வர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்வதற்கே ஆர்.என் ரவியை பாஜக நியமிக்கிறது என்றும் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் இந்த விவகாரத்தில் எந்த எதிர்வினையும் ஆற்றாது தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்த்தாலும் ஆளுநர் என்பவர் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி நியமிக்கப்பட்டவர் என்பதால் தமிழக முதல்வரே நேரில் சென்று ஆளுநரை வரவேற்றார்.
மாநில அரசு ஆளுநரை சீண்டுவது தவறு, ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னாலும் ஆளுநர் இல்லை என்றால் மு.க ஸ்டாலின் முதல்வராக நீடித்துக் கொண்டிருக்க முடியாது. தேர்தல் பிரச்சாரத்தின்போது நீட்டுக்கு முதல் கையெழுத்து போடுவேன் என்று ஸ்டாலின் கூறியது பொய் பிரச்சாரம் என்பது இப்போது வெளிவந்திருக்கிறது. ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் நீட் விலக்க சட்டத்தில் ஏன் அவரால் கையெழுத்து போட முடியவில்லை. அந்த கையெழுத்தை ஆளுநர் தான் போட வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில்தான் முரசொலியில் சிலந்தி என்ற பெயரில் ஆளுநர் விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, தான் சுர்ஜித் சிங் பர்னாலாவே, பன்வாரிலால் புரோகித்தோ, அல்லது சென்னாரெட்டியோ இல்லை என்பதை இந்த ஆறு மாத காலத்தில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அதன் வெளிப்பாடு தான் அவரின் குடியரசு தின விழா உரை.
தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்து விட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 6 மாதங்களில் 500, 600 க்கும் மேற்பட்ட இ-மெயில்கள் அவருக்கு வந்துள்ளது. ஆயிரக்கணக்கான கடிதங்கள் அவருக்கு வந்துள்ளது. 150க்கும் மேற்பட்ட விஐபிகளை அவர் சந்தித்துள்ளார். இந்த ஆறு மாதத்தில் அவர் திரட்டிய தகவலில் தமிழகத்தில் எல்டிடிஇ ஊடுருவல் இருக்கிறது. இடதுசாரி தீவிரவாதம் அதிகரித்திருக்கிறது. மதமாற்றம் நடக்கிறது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் ஊடுருவல் அதிகமாக இருக்கிறது. போதைப்பொருட்கள் இலகுவாக கிடைக்கிறது போன்ற தகவல்கள் எல்லாம் அவருக்கு கிடைத்துள்ளது. இதுபோல இன்னும் பல பிரச்சனைகள் அவர் கையில் உள்ளது. இதற்காக எல்லாம் பயந்து கொண்டுதான் முரசொலியில் சிலந்தி என்ற பெயரில் அவரை விமர்சித்து கட்டுரை வெளிவந்துள்ளது. ஏற்கனவே சிலந்தி வலையில் திமுக அரசு சிக்கிக் கொண்டிருக்கிறது. அதுதான் இப்படி ஒரு கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆட்சியில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதால்தான் இவ்வளவு அரசு பள்ளி மாணவர்கள் அதில் இடம் பெற்றுள்ளனர். நீட் விளக்கு என்று பேசுவதை தவிர்த்து திமுக அரசு 7.5% என்பதை 20 சதவீதமாக ஏன் உயர்த்த முன்வரவில்லை. உண்மையிலேயே கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க வேண்டுமென்றால், இந்த இட ஒதுக்கீடு எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், பொருளாதார ரீதியில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அரசு எண்ணினால் நீட் பயிற்சிக்காக ஒவ்வொரு மாணவருக்கும் 25 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று அரசு ஏன் அறிவிக்கக் கூடாது. நீட்டுக்கு முதல் கையெழுத்து போடுவோம் என்று அவர்கள் பொய் சொல்லி இப்போது அகப்பட்டுக் கொண்டு விட்டார்கள். இந்த ஒரு பொய்யில் இருந்து வெளிவர 10 பொய்கள் சொல்லப்படுகிறது. அதனால்தான் சிலந்தி என்ற பெயரில் கட்டுரை வந்திருக்கிறது
இப்போது வெளிப்படையாகவே எடப்பாடி அரசு கொண்டுவந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் நன்மையை மக்கள் புரிந்துகொண்டு விட்டார்கள். இந்த அளவிற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்கிறது என்றால் அதற்கு எடப்பாடி அரசு காரணமாக இருந்திருக்கிறது. இதை ஆளுநர் நன்கு புரிந்து கொண்டுவிட்டார். இதுதான் இப்போது திமுகவுக்கு பிரச்சனையாக இருக்கிறது. அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இது நன்கு தெரியும், ஆனால் அவர்கள் வேறு வழியில்லாமல் நீட் விலக்கு குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஆறு மாதத்தில் அவர்களும் அதில் இருந்து வெளிவந்து விடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.