முசிறியில் 14 வயது சிறுமி கர்ப்பம் ஆன வழக்கில் சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறியில் தந்தையை இழந்த சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் ஆரோக்கியமேரி ஜெயாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரிடம் சமூக பாதுகாப்பு ஆர்வலர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் சிறுமியின் இருப்பிடத்திற்கு சென்ற மகளிர் போலீசார் மற்றும் சமூக நல பாதுகாப்பு அலுவலர்கள் சிறுமியின் தாய் மற்றும் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் முசிறி பகுதியை சேர்ந்த ரத்தினவேல்(21), தொட்டியம் தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் துலையாநத்தம் கிராமத்தை சேர்ந்த பாபு (21) உள்ளிட்டோர் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து வாலிபர் ரத்தினவேல் மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சம்பவத்தில் தொடர்புடைய வாலிபர் பாபுவை போலீசார் தேடி வருகின்றனர். கர்ப்பிணியாக இருக்கும் சிறுமி முசிறி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.